ஊரடங்கை முற்றிலும் கைவிடுங்கள் – அரசுக்குக் கோரிக்கை

ஊரடங்கு என்பது சமூகமுடக்கம்!

சர்வமும் ஸ்தம்பித்த நிலையில் ஒரு சமூகம் தொடர்ச்சியாக முடக்கப்படுமானால், அது அந்த சமூகத்தை உயிரோடு சமாதியாக்கும் முயற்சியாகும்!

வசதியுள்ளவர்கள் எத்தனை நாளும் தாங்கலாம்!
ஏழைகள் எப்படி வாழ்வார்கள்…?

மூன்று மாதமாக சமூகத்தை முடக்கிபோட்டுவிட்டீர்கள்!

ஆட்டோ,கார்,வேன்…ஓட்டுனர்களுக்கு வேலை இல்லை!ஓட்டல்,கடை,சினிமா ஸ்டுடியோ,ஊடகம்…எல்லாவற்றிலும் வேலை இழப்பு!
வீட்டு வேலை செய்து பிழைக்கும் தாய்மார்களுக்கும் வேலை இல்லை!

பிழைப்பிற்காக வந்த நகரத்தில், ’உழைப்பிற்கே வாய்ப்பில்லை’ என்ற இறுக்கமான சூழலை- இரக்கமில்லாமல் தொடர்கிறீர்கள்!

வேலை இல்லை!
பணமில்லை!
சாப்பிட வழியில்லை!
இங்கு தண்ணீர் குடிக்கவும் காசு வேண்டும்!
வாடகைபாக்கி சேர்ந்து கொண்டே செல்கிறது!

நட்பு,சொந்தங்கள் அறிய வந்தால் ஓரிரு முறை தான் உதவ முடியும்!யாரும்,யாரையும் நிரந்தரமாக தூக்கிச் சுமக்க முடியாது.

பட்டினி கொடிது,வறுமை கொடிது,இறைஞ்சி வாழ்தல் அதைவிடக் கொடிது!

ஆட்சியாளர்களே மேன்மேலும் சமூகத்தை முடக்கிக் கொண்டே சென்றால்,அது ஒரு சமூகத்தின் தற்கொலையில் தான் முடியும்!

பயந்தவர்கள் வீட்டில் நிரந்தரமாக இருந்துவிடுங்கள்!
பலவீனமானவர்கள் உங்களை நன்றாகத் தற்காத்துக் கொள்ளுங்கள்!

பசிப்பவர்களைக் கொஞ்சம் உழைக்க விடுங்கள்..!
சமூகத்தை அச்சத்தில் ஆழ்த்தாதீர்கள்!
அச்சத்தை விட ஆபத்தான ஆயுதம் வேறில்லை!
அந்த ஆயுதம் இன்று அதிகாரவர்கத்தின் கரங்களில்!

அதை, ஏழை உழைப்பாளிகளை முடக்க,அவர்கள் வேலை இழக்க, அவர்களை பட்டினி போட்டு தவிக்கவிட்டு, தங்களைக் தற்காத்துக் கொள்ள மட்டுமே அதிகாரவர்க்கம் பயன்படுத்துகிறது!

எத்தனையோ இயற்கையின் சீற்றங்களை நாம் எதிர் கொண்டிருக்கிறோம்சுனாமி,வெள்ளம்,வறட்சி,புயல்..எல்லாவற்றிலும் நாம் எழுந்து நிற்க முடிந்தது.

அது போல கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலையும் இயற்கை மனித குலத்திற்கு தந்துள்ளது.ஆனால், அப்படி எதிர்கொள்ள வாய்ப்பின்றி, எல்லோரையும் முடக்காதீர்கள்!

கொரானா எல்லோரையும் தொற்றுவதில்லை! அது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களைத் தான் தொற்றுகிறது. அப்படி தொற்றியவர்களிலும் 96 சதவிகிதத்தினரை பாதிப்பின்றி விட்டுவிடுகிறது. இந்த மூன்றுமாத அனுபவப் பாடத்தை மனதில் இருத்தி சமூகத்தை சகஜமாக இயங்கவிடுங்கள்., அவரவர்களுக்கும் சுயபாதுகாப்பு உணர்ச்சி உண்டு தானே!

அரசாங்கம் என்பது சமூகத்தின் நிர்வாகவசதிக்கானது மட்டுமே! அது ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கான அடிப்படை உரிமையை தடுக்கும் அதிகாரத்தை கையில் எடுக்ககூடாது!

இன்னுமா அரசாங்கத்திற்கு உறைக்கவில்லை! ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தன்னை நம்பி பிழைக்க வந்தவர்களையெல்லாம் தாங்கிப் பிடித்தது எங்கள் மெட்ராஸ் எனப்படும் சென்னை மாநகரம்!

இங்குள்ளோரில் மூன்றில் ஒரு பங்கினர் அடித்தளத்தில் உள்ள அன்றாடம் காய்ச்சிகள்! மற்றொரு பங்கினர் எளிய நடுத்தர பிரிவினர். ஆக,மொத்த மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் உழைத்தால் மட்டுமே வாழமுடிந்தவர்கள்! அது மூன்று மாதங்களாக முற்றிலும் முடக்கப்பட்ட நிலையில் எப்படி வாழமுடியும்?

இதனால்,தான் லட்சக்கணக்கானவர்கள் கிராமங்களை நோக்கி நகர்கிறார்கள்! அந்த மண் குறைந்தபட்சம் பட்டினியில் இருந்தாவது அவர்களை விடுவிக்கும் என்று நம்புகிறார்கள்! இது வரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேறிவிட்டனர் –உங்கள் தடைகள்,கெடுபிடிகளையும் மீறி!

கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும்.வீட்டை காலி பண்ணிவிட்டு நடுவீதிக்கு வந்துவிட்டவர்களை எங்கு திருப்பி அனுப்புவீர்கள்.அவர்கள் இனி சாலைகளில் உட்கார்ந்து தான் போராட வேண்டியதாகிவிடும்! இல்லை,சிறைச் சாலைகளில் அடைத்து நீங்கள் தான் சாப்பாடு போட வேண்டும்.

ஆபத்துகள் சூழ்ந்த உலகத்தில் தான் அனைத்து இயக்கங்களும் நடந்து கொண்டுள்ளன! எல்லா காலங்களிலும் ஏதோ சில ஆபத்துகளை எதிர்கொண்டு தான் சமூகம் தன்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது! முதலில் எதையும் எதிர் கொள்ள அது உயிர்ப்புடன் இருந்தாக வேண்டும்.அதற்கே அனுமதி மறுக்கப்படுமானால், நமது போராட்டம் கண்ணுக்குத் தெரியாத வைரசிடமா? கண்ணுக்கு முன்னால் இருக்கும் – அடக்குமுறையைத் தவிர வேறெதையும் அறிந்திடாத – அரசிடமா?

# புலிகள் கொன்றுவிடுமே என்பதற்காக காட்டில், மான்கள் முடங்குவதில்லை!

# இயற்கை சீற்றங்களுக்கு பயந்து உழவர்கள் பயிரிடாமல் நிலத்தை தரிசாக விடுவதில்லை!

# ஆயிரக்கணக்கில் விபத்துகள் நடக்கின்றனவே என்பதற்காக யாரும் வீட்டில் முடங்குவதில்லை!

# வெற்றி பெற்றவர்கள் குறைவு,தோல்வி பெற்றவர்களே அதிகம் என்பதால் சினிமாவிற்கு புதியவர்கள் வருகை குறைவதில்லை!

ஸ்வீடனைப் பாருங்கள்! ’’மக்களை பொத்தி,பொத்தி வைத்தால் பயனில்லை,புறப்பட்டுச் செல்லுங்கள் அவரவர் வேலைக்கு’’ என்று சகஜ வாழ்க்கைக்கு சம்மதித்துவிட்டது. அதனால்,அங்கு ஒன்றும் கொரோனா அதிகரித்திடவில்லையே!

அமெரிக்காவில் கொரொனா உச்சத்தில் இருந்த நிலையிலும் ஒரு அப்பாவி கருப்பின இளைஞர் அநீதியாக கொல்லப்பட்டதை எதிர்த்து, எத்தனை ஆயிரமாயிரம் மக்கள் ஆங்காங்கே வீதியில் இறங்கி ஒன்றிணைந்து போராடினார்கள்!

அமெரிக்கா மட்டுமல்ல,ஐரோப்பா முழுவதுமே இந்த அறச்சீற்றம் வீதிகளில் வெளிப்பட்டது.கொரானாவால் அவர்களின் அறச்சீற்றத்தை கொன்று புதைக்க முடியவில்லையே!

மறுபடியும் சொல்வேன். அச்சம் தான் ஆபத்திலும் ஆபத்தானது.அச்சத்தை அனைவர் மீதும் திணித்து, அனைவரது அடிப்படை உரிமைகளையும் பறிப்பதை மட்டுமே கொரனா காலத்தில் அதிகாரவர்க்கம் சாதித்துக் கொண்டிருக்கிறது!

துணிந்தால் தோல்வியில்லை!
பயந்தால் வாழ்க்கையில்லை!

– சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர்

Leave a Response