உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் – ஆளுநருக்கு தூபம் போடும் கமல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவின் விவரங்களை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு, விரிவாகத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவதை தாங்கள் அறிவீர்கள். கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் தொடங்கிய போராட்டம், 100 நாட்களாக அமைதியான முறையில் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த 22-ம் தேதி அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் மக்கள் போராட்டத்தின்போது வன்முறை நடந்ததாக செய்தி வெளியானது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.

உயர் அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் போலீஸார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். ஆனால், துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிடும்போது முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்ற விவரங்களை இதுவரை தமிழக அரசு தெரிவிக்கவில்லை.

துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்தது யார் என்பது குறித்தும், அதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டுகளின் விவரங்கள், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் விவரங்களையும் அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

நடந்த சம்பவங்கள் என்ன என்பதை அறிவதற்காக விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது. ஆனால், அந்த ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரமோ, தண்டனை அளிக்கும் அதிகாரமோ அளிக்கப்பட வில்லை.

எனவே, அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களின்படி, துப்பாக்கிச்சூடு நடத்த நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால், அதுகுறித்தும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக உயிர்கள் பலியாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார்

Leave a Response