ஸ்டெர்லைட் ஆலை மூடல் கண்துடைப்பு நாடகம் – சீமான் விளாசல்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற மக்கள் மீது போலீசார் வேண்டும் என்றே துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட பிறகு ஆலையை மூட உத்தரவிட்ட அரசு 100 நாள் மக்கள் போராடும் போது ஏன் ஆலையை மூட உத்தரவிடவில்லை. துப்பாக்கி சூட்டிற்கு பின்னர் மக்களிடம் கனிவுடன் பேசி அமைதியை ஏற்படுத்தும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அதற்கு முன்பு ஏன் அப்படி நடக்கவில்லை.

இதில் இருந்தே கலவரத்தை திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பொதுமக்கள் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் தங்கள் மனைவி, கைக்குழந்தைகளுடன் போராட்டத்திற்கு வந்திருக்க மாட்டார்கள். அமைதியான முறையில் தான் பேரணியாக சென்றார்கள்.

ஆனால் போலீசார் முதலிலேயே கலவரம் வரும் என திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளார்கள். கலவரத்தின் போது துப்பாக்கி சூடு நடத்த துணை தாசில்தார் உத்தரவிட்டார் என்பது நகைப்புக்குரியதாக உள்ளது. பெரிய அதிகாரிகள் என்ன ஆனார்கள். இன்னும் கலவரத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று மர்மமாகவே உள்ளது.

தூத்துக்குடி மக்களை சந்திக்க நான் பலமுறை அனுமதி கேட்டும் எனக்கு அனுமதி வழங்கவில்லை. இன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட கடைசிவரை அனுமதி தராமல் இழுத்தடித்தார்கள்.

இந்த அரசு போராடுகிற அனைவரின் குரல்வளையையும் நெரிக்கிறது. போராட்டம் நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

இவ்வளவு நடந்த பிறகு இப்போது ஆலையை மூடிவிட்டோம் என்று சீல் வைக்கிறார்கள். ஸ்டெர்லைட் விவகாரத்தை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து மெதுவாகதான் விசாரிப்போம் என்கிறார்கள்.

இதிலிருந்தே ஆலை மூடப்பட்டது கண்துடைப்பு நாடகம் என தெரிகிறது. உண்மையாக மூட வேண்டும் என்றால் அரசு எடுத்த கொள்கை முடிவில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். மதுக்கடைகளை அரசு மூடிய போது அது கொள்கை முடிவு அதில் தலையிடமாட்டோம் என அறிவித்த கோர்ட்டு இந்த வழக்கில் எப்படி தலையிடுகிறது.

சட்டமன்றத்தில் இனி ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் மக்கள் மீதுள்ள உண்மையான அக்கறை வெளிப்படும். இவர்கள் மூடுகிறோம் என்று போட்ட உத்தரவு நீட் தேர்வுக்கு போட்டது போல் ஆகிவிட கூடாது.

நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதும் இது கோர்ட்டு உத்தரவு என நீட் தேர்வை அனுமதித்து விட்டார்கள்.

அதுபோல இந்த வழக்கிலும் ஆலையை திறக்க கோர்ட்டு உத்தரவு வந்தால் அதை அனுமதித்து விடுவார்கள். நிலம், மண், காற்றை நஞ்சாக்கும் ஸ்டெர்லைட் எதிர்த்து எந்த ஆயுதமும் இல்லாமல் போராடும் இவர்களை சமூக விரோதி என்று மத்திய மந்திரி கூறுகிறார்.

நாட்டில் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்கள் சமூக குற்றவாளிகள் இல்லையாம். எதிர்த்து போராடுபவர்கள் சமூக விரோதிகளாம். இதை சிந்தித்து பார்க்க வேண்டும். எந்த கலவரம் என்றாலும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்துவதால் அதில் தெளிவு கிடைக்காது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பதவியில் இருக்கும் நீதிபதி கொண்டு விசாரணை நடத்த செய்ய வேண்டும். சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் அது அரசின் அமைப்பாகவே இருந்து விசாரிக்கும். தனிப்பட்ட தீர்வாக அமையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response