பேச்சுக்காக நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு – பேச்சு விவரம்

திருப்பதி ஏழுமலையான் கோயில்குறித்து அவதூறு பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது……

தமிழ்த் திரைப்படத்துறையின் பழம்பெரும் நடிகர் சிவக்குமார், திருப்பதி கோயில் குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க வகையில்பேசிய ஒரு காணொலியை தமிழ்மாயன் என்பவர் தேவஸ்தானத்துக்கு அனுப்பி வைத்தார். அந்தக் காணொலியை ஆய்வு செய்தோம். சிவக்குமாரின் பேச்சு, உலகம் முழுவதும் உள்ள பல கோடி ஏழுமலையான் பக்தர்களுக்கும் தேவஸ்தானத்தின் பெருமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதால், இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி திருமலை 2-வது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

இலக்கியம்.. ஆரோக்கியம்… இல்லறம் என்கிற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசினார்.அதில்….

கடவுள் இருக்கிறார் என நினைத்தீர்களானால் சுனாமி ஏன் வந்தது? கோயிலில் இன்னமும் தீண்டாமை உள்ளது. ஏழை, பணக்காரன் பாகுபாடு கோயில்களில் உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடி கோடியாகக் காணிக்கை கொட்டுகிறது. காட்பாடியிலிருந்து 48 நாள் விரதமிருந்து, நடந்தே திருப்பதி கோயிலுக்கு செல்கிறான் ஒரு ஏழை பக்தன். இவன் நீண்டவரிசையில் காத்திருந்து பின்னர் தான் சாமியை தரிசனம் செய்கிறான். அங்கு பெரிய மூங்கில் குச்சியில் ‘ஜரகண்டி.. ஜரகண்டி’ எனஅடித்து விரட்டுகிறார்கள்.

அதுவே ஒரு பணக்காரன், மனைவிக்குத் தெரியாமல் வேறு பெண்ணை அழைத்துக் கொண்டு திருமலைக்குச் சென்று, விடுதி அறையில் தங்கி, மதுபோதையில் இருந்து விட்டு, காலையில் குளிக்காமல் கோயிலுக்குள் சென்றால், அவனுக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது என சிவக்குமார் பேசியிருப்பது அந்த காணொலிக் காட்சியில் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பேச்சைக் கேட்ட பலர், சிவக்குமார் உண்மையைத் தானே பேசியிருக்கிறார் இதற்கு எதற்கு வழக்கு? என்று கேட்கின்றனர்.

Leave a Response