அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மே 12 அன்று தனது 71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பிறந்தநாள் முடிந்த கையோடு எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் நேற்று திருப்பதிக்குச் சென்றார். அங்கு திருமலையில் உள்ள ஹயக்ரீவர் மற்றும் வராக சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த கையோடு அவர் திருப்பதி சென்று ஹயக்கிரீவர் மற்றும் வராக சுவாமிகளை வழிபட்டதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
என்ன காரணம்?
இரண்டு நாட்களுக்கு முன், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் சென்றார். தனுஷ்கோடியில் உள்ள சேது தீர்த்தத்தில் புனித நீராடினார். காசி – இராமேஸ்வரம் யாத்திரை மேற்கொண்டுள்ள ஓபிஎஸ் கடந்த மே 2 ஆம் தேதி இராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடி புண்ணிய தீர்த்தத்தை காசி எடுத்துச் சென்றார். அங்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி விட்டு, காசி கங்கை நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் இராமேஸ்வரம் கோயிலில் வழிபாடு நடத்த மே 11 அன்று குடும்பத்துடன் சென்றார்.
இராமநாத சுவாமி மூலவர் சன்னதி அருகே உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி முன்பு 45 நிமிடங்கள் ருத்ராபிஷேக பூஜை நடைபெற்றது.
இந்த பூஜை செய்வதால் பாவங்கள் நீங்கி, இது செல்வத்தை ஈர்க்கும், கஷ்டங்களை போக்கும். எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்; நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. பூஜைக்கு பின் மூலவருக்கு கங்கை, பால், கோடி தீர்த்த அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்து காசி – இராமேஸ்வரம் யாத்திரையை நிறைவு செய்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பூஜைக்கு எதிர்வினையாகவே எடப்பாடி பழனிச்சாமி, அசுரர்களிடமிருந்து வேதங்களை மீட்டுத் தந்ததாகச் சொல்லப்படும் ஹயக்கிரீவரையும், புராணத்தின் படி, இரணியாட்சன் என்ற அரக்கனிடமிருந்து பூமியைக் காப்பாற்றிய வராக சுவாமியையும் அவர் வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது.
இதனால், அரசியல் அரங்கம், நீதிமன்றம் ஆகியனவற்றைத் தாண்டி இப்போது கோயில்களில் அதிமுகவின் உட்கட்சிச் சண்டை நடக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இரண்டு பேர் இரண்டு விதமான கோரிக்கைகள் வைத்தால் கடவுள் எதை நிறைவேற்றுவார் என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.