இந்தியா முழுக்க 15 கட்டுப்பாடுகள் – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 15 கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள 15 அம்ச கட்டுப்பாடுகள் பின்வருமாறு:-

* நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. உடற்பயிற்சிக்கூடங்கள், நீச்சல் குளங்களும் மூடப்படும். மாணவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும்.

* கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம்.

* தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும்.

* பெரிய நிறுவனங்கள் ஆலோசனைக் கூட்டங்களை காணொலிக் காட்சி மூலம் நடத்தலாம்.

* திருமண மண்டபங்களில் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும். புதிய நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக்கூடாது.

* உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். அங்கு கைகழுவுவதற்குக் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

* உள்ளூர் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தையும் ஒத்திவைக்க வேண்டும்.

* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யக் கூடாது.

* மக்கள் தேவையின்றி பேருந்துகள், தொடர்வண்டிகள், விமானங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

* அனைத்து வணிக வளாகங்களிலும் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் வரும் வகையில் ஏற்பாடு செய்வது நல்லது.

* வியாபாரிகள் சங்கத்தினர் கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். சந்தைகளில் மக்கள் நெருக்கமாக இருப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

* அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சிறுவர்களிடம் எப்படிப் பழக வேண்டும்? என்பதை மருத்துவமனைக்கு வருபவர்களிடம் மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும்.

* ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகுலுக்குவதைத் தவிர்க்கவும். பாசத்துடன் கைபிடிப்பதையும், கட்டிப்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

* ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது மிகவும் கவனம் தேவை. எங்கிருந்து, என்ன பொருட்கள் வாங்குகிறோம்? என்பதில் கூடுதல் கவனம் வேண்டும்.

* கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள். வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேவையற்ற தகவலைப் பரப்பாமல் அமைதி காப்பது நமது கடமையாகும்.

மேற்கண்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

Leave a Response