திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் (98) மார்ச் 7 ஆம் தேதி காலமானார். 1977 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து 43 ஆண்டுகள் திமுக பொதுச்செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் திமுகவின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு வருகிற 29 ஆம் தேதி கூடும் என்று திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு…
கடந்த 15 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக திமுக பொதுக்குழுக் கூட்டம் வருகிற 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 16 ஆம் தேதி கடிதத்தின் வாயிலாக கட்சியின் பொருளாளர் துரைமுருகன், பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விழைவதாகவும், எனவே அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்கிறேன்.
எனவே, 29 ஆம் தேதி அன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும். பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்…..,
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 31 ஆம் தேதி வரை ஒத்தி வைத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.