உங்களை மனதாரப் பாராட்டுகிறேன் இதையும் செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

தமிழில் படித்தவர்களுக்கு தமிழக வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்கிற சட்டமுன்வடிவுக்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…..

10, 12 ஆம் வகுப்புகளிலும், பட்டப்படிப்பிலும் தமிழில் படித்தவர்களுக்கே தமிழகத்தின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டமியற்றியிருப்பதை முழுமனதோடு வரவேற்கிறேன்.

பன்னெடுங்காலமாக தமிழர் நிலமெங்கும் கருத்தியல் பரப்புரையும், களப்பணியும் செய்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகள் முன்வைத்த கோரிக்கை முழக்கம் இன்று செயலாக்கம் பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. சட்டமியற்றிய தமிழக அரசின் இச்செயல்பாட்டை மனதாரப் பாராட்டுகிறேன்.

உடனடியாக இந்த ஆண்டிலிருந்தே இச்சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இரண்டாம் பிரிவு பாடத்திட்டத்தில், தமிழ் மொழியில் கேட்கப்படும் கேள்வித்தாள் நீக்கப்பட்ட புதிய பாடத் திட்டத் தேர்வு முறையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response