மேட்டூர் மக்களுக்காக கத்திபட ஸ்டைலில் ஒரு போராட்டம்

தோணி மடுவு திட்டம் –மேட்டூர் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம்.தோணி மடுவு திட்டம் என்பது மேட்டூர் தாலுக்காவை சேர்ந்த தோணி மடுவு வனப்பகுதியில் தடுப்பணை கட்டி காவிரியில் இருந்து பாலாற்றுக்குப் போகும் கிளையாறு ஒன்றினை மேட்டூர் –கொளத்தூர் ஒன்றினையத்து மக்கள் பயன்பெறும் வகையில் திருப்பிவிடுவதாகும்.(மக்கள் பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள உபரி நீர் மீண்டும் காவிரியில் கலக்கும் வண்ணம் இந்த திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது).
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்கவை அடுத்துள்ள கொளத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 20,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கடந்த நான்கு வருடங்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயம் செய்ய முடியாமலும் குடிநீருக்குக் கூட தண்ணீர் இல்லாத நிலையம் இருந்து வந்தது.
(நான்கு வருடங்களுக்கு முன்பு வரை அவ்வப்பொழுது பரவலாக பெய்து வந்த சாரல் மழையினால் ஓரளவுக்கு தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்பி வந்தோம்.
இப்பொழுது அதுவும் இல்லை என்று தோணி மடுவு திட்ட கள ஆய்விற்கு நாங்கள் சென்றிருந்த பொழுது விவசாயி ஒருவர் தெரிவித்திருந்தார்)
டெல்டா பகுதியைவிட அதிக அளவிலான காய்கறி,பழங்கள்,கிழங்கு வகைகள் இந்தப் பகுதியில் தான் விளைகின்றன.
இந்தப் பகுதியில் பருத்தி ,மஞ்சள்,வாழை.மிளகாய்,பப்பாளி,திராட்சை,மாதுளை,மாங்காய்,நெல் மற்றும் சிறுதானியங்கள் பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றன.
இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்ற போதிலும் பாசனத்திற்கு நீரின்றி இருக்கும் ஒரு குடும்பம் சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ருபாய் 850 கொடுத்து குடிக்கவும் ,பாசனத்திற்கும் தண்ணீரை வெளியில் இருந்து டிராக்டர் மூலம் வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தோணிமடுவு திட்டம் நிறைவேறினால் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த மூன்று ஒன்றியத்திலும் உள்ள சுமார் 3,00,000 மக்கள் பயன் பெறுவார்கள்.

#1963 ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் இத்தோணி மடுவு திட்டத்திற்கான முதல் பரிந்துரையை கொண்டு வந்தது.

#1985 ஆம் ஆண்டு எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த காலத்தில் தோணி மடுவு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் துவக்கப்பட்டது.

#1986 ஆம் ஆண்டு அ.தி.மு.க MLA கே.பி நாச்சிமுத்து அவர்களின் குறுக்கீட்டால் தோணி மடுவு திட்டம் நடைமுறைக்கு வந்தால் நாச்சி முத்து அவர்களுக்கு சொந்தமான இரண்டு காடுகள் பறிபோகும் என்ற காரணத்தால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

#1992 ஆம் ஆண்டு கொளத்தூர் பகுதி பஞ்சாயத்து தலைவரான திரு. இளங்கோ அவர்களின் முயற்சியினால் தோணி மடுவு திட்டம் அமல்படுத்தக் கோரி மேட்டூர் பகுதி விவசாயிகளின் முதல் போராட்டம் நடைபெற்றது.

#1993 ஆம் ஆண்டு வனப்பாதுகாப்பு சட்டத்தை கணக்கில் காட்டி தோணிமடுவு திட்டம் மத்திய அரசால் கைவிடப்பட்டது.அன்று முதல் மேட்டூர் பகுதி மக்களின் கனவு திட்டமான தோணி மடுவு திட்டத்திற்கு மக்களை ஒன்று திரட்டி போராட யாரும் முன் வராத காரணத்தினால் (சிறிய சிறிய போராட்டங்கள் தவிர )பெரிய அளவிலான போராட்டம் எதுவும் முன்னெடுக்கப்படாமல் இருந்து வந்தது.

தொகுதிக்கு ஒவ்வொரு முறை ஓட்டுக் கேட்க வரும் அரசியல் வாதிகள் தங்களை தேர்வு செய்தால் நிச்சயம் தோணி மடுவு திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதிகள் கொடுத்தார்களே தவிர அதற்கான எந்த முன்னெடுப்புகளையும் செய்யவில்லை.
தொகுதி MLA திரு எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள் மட்டும் மூன்று முறை சட்ட மன்றத்தில் தோணி மடுவு திட்டத்தை பற்றி பேசியும் அரசாங்கம் அதற்கு செவி சாய்க்காத நிலை நிலவி வந்த இந்த சூழலில்,
தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன் மற்றும் கி.எஸ் கவுதம் ஆகியோர் வீடுவீடாக சென்று மக்களை திரட்டியதன் விளைவாக தோணி மடுவு போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு பெருகியதுடன் அந்தப் பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளும் மாணவர்கள் –விவசாயிகளின் நியாயமான இந்தப் போராட்டத்திற்கு அதரவு அளிப்பதாக தெரிவித்ததை அடுத்து மேட்டூர் பகுதியில் இருக்கும் அனைத்து கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களுக்கு போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கட்சியுடன் நாங்கள் சேர்ந்து போராட முடியாது அந்தக் கட்சியுடன் நாங்கள் சேர்ந்து போராட முடியாது என பெருபாலான அரசியல் கட்சிகள் போராட்டத்திலிருந்து பின் வாங்கியது.
இறுதியில் விவசாயிகள்-இளைஞர்கள் –மாணவர்கள்-தி.வி.க தோழர்கள் மற்றும் தொகுதி MLA பார்த்திபன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் எந்தக் கட்சி சாயமும் இல்லாமல் தோணி மடுவு திட்டம் கோரும் கோரிக்கையுடன் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மக்களுக்கனா போராட்டம் இன்று 16-11-2014 மேட்டூர் அணை முன்பு மக்களால் நடத்தப்பட்டது.

3 மாதங்களாக இந்த போராட்டத்திற்கான களப்பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தோழர்கள் கொளத்தூர் பிரவீன்,ஜி.எஸ்.கவுதம் , முத்துக்குமார், ஜெயச்சந்திரன் ,சுபி,சிவா ,பார்த்திபன்,மதிவாணன் ,தமிழினியன் ,பிரபாகரன்,பைசல் மற்றும் பிரபு ஆகியோருக்கு நம் வாழ்த்துக்கள்.

போராட்டத்தின் அடுத்தகட்டமாக நாளை 17-11-2014 அன்று சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் தோணி மடுவு திட்டத்தை அமல் படுத்தகோரி விவசாயிகள் மற்றும் தமிழ் இளைஞர்கள் &மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக மனு ஒன்றினை ஒப்படைக்க இருக்கிறோம்.

இதைத் தொடர்ந்து விவசாயிகளும் மாணவர்களும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறோம்.

வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர பயிர் உயரும்
பயிர் உயர கோல் உயரும்
கோல் உயர தமிழ்நாடு உயரும்.

எனக்கூறி தோணிமடுவு திட்டத்தை நிறைவேற்றி மேட்டூர் மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்போம்..

-தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு

Leave a Response