டிரம்ப் தலைக்கு விலை அறிவித்த ஈரான் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்த மோடி

பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவர் காசிம் சுலைமானி உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் போர் மூளும் அபாயமும் வளைகுடா நாடுகளில் பதற்றமும் நிலவுகிறது.

இந்த நிலையில் தொலைக்காட்சியில் பேசிய ஈரான் மூத்த அதிகாரி ஒருவர், ஈரானில் 8 கோடி மக்கள் வசிக்கின்றனர் என்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.இது இந்திய மதிப்பில் 574 கோடி ரூபாய்.

இதற்கு, ஈரானைச் சேர்ந்த ஒவ்வொருவரும், ஒரு அமெரிக்க டாலர் வழங்கி உதவ வேண்டுமென வலியுறுத்தினார். முன்னதாக ஈரான் அதிபர் பேசுகையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது எங்களால் தாக்குதல் நடத்த முடியும். அதற்கான சக்தி எங்களிடம் உள்ளது சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம் என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின் போது, டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அரசு தரப்பில் இது பற்றி கூறப்பட்டு இருப்பதாவது….

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அமெரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை உள்ளிட்டவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு, தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் பிரதமர் மோடி, டிரம்புடனான உரையாடலின் போது குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு, இருநாடுகளுக்கு இடையேயான முக்கியத்தும் வாய்ந்த பங்களிப்பில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டு இருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பரஸ்பர நலன்கள் அடிப்படையில் அனைத்துத் துறைகளிலும் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த டிரம்புடன் இணைந்து பணியாற்ற தனது விருப்பத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இந்திய மக்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தளபதி கொல்லப்பட்டதால் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள சூழலில் அமெரிக்க அதிபருடன் மோடி பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Response