சிங்கள அதிபர் தேர்தல் இன்று

சிங்கள அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் சனவரி 2020 தொடக்கத்தில் நிறைவடைகிறது.

இதனால் இன்று (நவம்பர் 16,2019) இலங்கை அதிபர் தேர்தல்நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித்பிரேமதாச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்தியவம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் குணரத்னம், மக்கள் விடுதலை முன்னணியின் அநுர குமார திசநாயக்க, இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேரா, தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா உட்பட மொத்தம் 35 பேர் களத்தில் உள்ளனர்.

தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் கோத்தபய ராஜபக்சவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

வாக்கு எண்ணிக்கைக்காக 43 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும். நள்ளிரவு முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஞாயிற்றுக்கிழமை மதியம் இலங்கையின் 8-வது அதிபர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பாதுகாப்புக்காக 60 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினரும், 8,000 சிவில்பாது­காப்புப் படை­யினரும் நாடுமுழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் 22 மாவட்டங்களில் 12,845 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை5 மணி வரை நடைபெறும்.

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு நனமை பயக்காது என்பதுதான் எதார்த்தம்.

Leave a Response