ஒரு கலெக்டர் இருக்கும்போதே இன்னொருவர் நியமனம் – மதுரையில் நடப்பதென்ன?

2019 ஏப்ரலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது வாக்கு எண்ணும் மையத்தில், பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளிட்ட அதிகாரிகள் நுழைந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் மாற்றப்பட்டார்.

அப்போது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரி நாகராஜன் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.

நாகராஜன், அரசியல் தலையீடுகளுக்கு இடம் கொடுக்காமல், அங்கன்வாடி மைய ஊழியர்களை நியமித்தார். இதனால் ஆளும் தரப்புக்கு எதிராக இருப்பதாகக் கூறி தடாலடியாக மாற்றப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது.

ஜூலை 1 ஆம் தேதி சென்னை ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜசேகர், மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.

அவர் அக்டோபர் 4 ஆம் தேதி விடுப்பில் சென்றார்.அதற்கு, ஆளும் கட்சியினருக்கு ராஜசேகர் பணிந்து செல்ல மறுத்ததால் ஆளும் கட்சி தரப்பிலிருந்து தொடர் நெருக்கடிகள் அவருக்கு கொடுக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் விடுப்பில் சென்றதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி வினயை, மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், ராஜசேகரின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை.

மாவட்ட ஆட்சியர் விடுப்பில் இருக்கும் போதே இன்னொருவரை ஆட்சியராக நியமித்திருப்பது ஆளுங்கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவே உள்ளது.

Leave a Response