
அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சசிகலா தனது கணவரை சந்திப்பதற்காக 15 நாட்கள் விடுப்பு (பரோல்) கேட்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மைக் கண்காணிப்பாளர் சோமசேகரிடம் நேற்று முன் தினம் விண்ணப்பித்தார்.
சசிகலாவுக்கு விடுப்பு வழங்கலாமா எனக் கேட்டு, கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக், உள்துறை, சட்ட அமைச்சகத்துக்கு சோமசேகர் கடிதம் அனுப்பினார்.
சசிகலா சென்னை வருவதால் ஏதேனும் சட்டச் சிக்கல் ஏற்படுமா? அவருக்கு ஆபத்து உள்ளதா? போதிய பாதுகாப்பு வழங்கப்படுமா போன்ற விஷயங்களில் தடையில்லாச் சான்று வழங்குமாறு சென்னை மாநகரக் காவல் ஆணையருக்குக் கடிதம் அனுப்பினார்.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் நேற்று தடையில்லாச் சான்றிதழின் நகலை மின்னஞ்சலில் சிறைத் துறைக்கு அனுப்பி வைத்தார்.
இதே போல கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சசிகலா விடுப்பில் செல்ல அனுமதி அளித்தார். மாநில உள்துறை செயலர் பசவராஜ், சிறைத்துறையின் விதிமுறையின்படி சசிகலாவுக்கு விடுப்பு வழங்கலாம் என பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஒப்புதல் கடிதத்தை அனுப்பினார்.
சசிகலாவுக்கு விடுப்பு வழங்குவதற்கு சட்டத்துறை இன்று (அக்டோபர்.6,2017) ஒப்புதல் அளித்த நிலையில், அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சசிகலா ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.


