மெர்சல் படத்துக்கான தடை நீக்கம் – ஆனாலும் தீபாவளியன்று திரைக்கு வருமா?

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஏ.ஆர். பிலிம் பேக்டரி என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

எனது மகன் ஆரூத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட கடந்த 2014-ம் ஆண்டே தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன்.

இந்த நிலையில் ‘மெர்சல்’ என்ற தலைப்பில் தேனாண்டாள் ஸ்டூடியோ உரிமையாளர் ராமசாமி படம் எடுத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ‘மெர்சல்’ என்ற தலைப்பு நான் பதிவு செய்துள்ள ‘மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பைப் போன்றே உள்ளது.

எனவே, தேனாண்டாள் ஸ்டூடியோ நிறுவனமோ, அதன் உரிமையாளரான ராமசாமியோ அல்லது மற்ற நபர்களோ ‘மெர்சல்’ என்ற பெயரைப் பயன்படுத்தி திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘மெர்சல்’ என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிட ஏற்கனவே இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி அனிதாசுனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேனாண்டாள் ஸ்டுடியோ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மெர்சல் என்ற தலைப்பும், மெரசலாயிட்டேன் என்ற தலைப்பும் வெவ்வேறு ஆகும். நாங்களும் இந்த படத் தலைப்பை ஏற்கனவே பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் பதிவு செய்துள்ளோம். பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இந்தச் சூழலில் படத்திற்குத் தடை விதித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே தடையை நீக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, மெர்சல் என்ற தலைப்பு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பு 6-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். அதுவரை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இன்று, விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் பெயருக்குத் தடை இல்லை என்று கூறியதோடு, மெர்சல் என்ற பெயரை பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து மெர்சல் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இது பெயர் அல்ல, உணர்வு. தடைகள் தாண்டி வருகிறார் மெர்சல் அரசன். நம்ம தலைப்பு நமக்கே இவ்வாறு அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்களும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

இப்படம் அக்டோபர் 18 தீபாவளியன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போதைய தணிக்கைச்சான்று பெறும் விதிமுறைகள் படி சுமார் மூன்று வாரங்கள் முன்னதாகவே தணிக்கைக்கு அனுப்பவேண்டும். இப்பட வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் தணிக்கைச்சான்று பெறத்தாமதம் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் தீபாவளிக்கு படம் வெளியாவது சந்தேகம்தான் என்று சொல்கிறார்கள்.

Leave a Response