ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு? – திமுக வெற்றி?

தமிழக சட்டமன்றத்துக்கு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து, இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து திமு.க. வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் 203 வாக்குகளை எண்ணவில்லை என்றும், அதேபோல 19, 20 மற்றும் 21-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும் கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளையும், 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளின் வாக்குகளையும் மீண்டும் எண்ணுமாறு உத்தரவிட்டது.

இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க எம்.எல்.ஏ. இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அவரது மேல்முறையீட்டு மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இன்பதுரை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் முகுல் ரோகத்கி வாதாடுகையில், “தபால் வாக்குகளை ஒரு ‘கெசட்டட்’ அதிகாரிதான் (அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி) அங்கீகரிக்க வேண்டும். ஆனால் இந்த 203 வாக்குகளில் தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்டுள்ளார். அவர் ‘கெசட்டட்’ அதிகாரி இல்லை என்பதால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்தத் தேவையே இல்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, மறுவாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

விவாதத்துக்குப் பின், மறுவாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள். அதேசமயம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவை தற்போது அறிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டது பற்றி விரிவாக ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு அப்பாவு உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டு, வழக்கு விசாரணையை வருகிற 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே,உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவதற்காக, நெல்லை மாவட்டத்தில் இருந்து ஓட்டு எந்திரங்கள், தபால் ஓட்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

உயர்நீதிமன்ற கூட்ட அரங்கில் பலத்த பாதுகாப்புடன் நேற்று இந்த ஓட்டுகள் எண்ணப்பட்டன.உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பிரிவு பதிவாளர் நீதிபதி சாய் சரவணன் மேற்பார்வையில் காலை 11.30 மணி முதல் மாலை 6.15 மணி வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

அப்போது அங்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, அவரது வழக்குரைஞர், அப்பாவு தரப்பில் தி.மு.க.வைச் சேர்ந்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, ஏ.இ.ரவிச்சந்திரன், ‘பெல்’ நிறுவனத்தின் பொறியாளர்கள் இருவர் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் மனுதாரரான அப்பாவு வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லவில்லை. ஆனால் வெளியில் நின்றார். வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முதலில் தபால் வாக்குகளும், அதன்பிறகு 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. இந்த மறுவாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மறுவாக்கு எண்ணிக்கை முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பின்னர், ஓட்டு எண்ணிக்கை குறித்த விவரங்களையும், முடிவுகளையும் அறிக்கையாக தயாரித்து சீலிடப்பட்ட கவரில் வைத்து தலைமை பதிவாளர் சி.குமரப்பனிடம், நீதிபதி சாய் சரவணன் வழங்கினார். இந்த அறிக்கையை நீதிபதி முன்பு உடனடியாக தலைமைப் பதிவாளர் தாக்கல் செய்தார்.

மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிடப் படவில்லை.உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த பின்னரே முடிவு வெளியிடப்படும்.

இதற்கிடையே, ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் தி.மு.க.வின் அப்பாவு 863 வாக்குகள் அ.தி.மு.கவின் இன்பதுரை 200 வாக்குகள்.

அப்பாவு 663 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

வழக்குரைஞர்கள் மத்தியில் உலவும் இந்தத் தகவல் வெளிவந்தால் திமுகவின் அப்பாவு சட்டமன்ற உறுப்பினராகிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response