
பாளையங்கோட்டையில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முறையை வங்கிகளோடு இணைக்கும் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றார் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
ஒன்றிய அரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பொத்தாம் பொதுவாக ரூ.10 இலட்சம் கோடி தந்தோம், ரூ.20 இலட்சம் கோடியை தமிழ்நாட்டுக்குத் தந்தோம் என்று ஒன்றிய அரசு சொல்கிறதே தவிர, எந்தத் திட்டத்துக்குகு நிதி ஒதுக்கி உள்ளது எனச் சொல்ல மாட்டார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பிப்பதற்கு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு ரயில்வே திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.701 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சென்னையில் 2 ஆவது மெட்ரோ ரயில் திட்டத்தை உள்துறை அமைச்சர் நேரடியாக வந்து,எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கும்போது ஆரம்பித்தார்கள். ஆனால், அந்தத் திட்டத்துக்கு எந்தவிதமான நிதியும் இதுவரை கொடுக்கவில்லை.ஆனால், ரூ.63 ஆயிரம் கோடி நிதி கொடுத்துள்ளதாக பாஜக பொய் சொல்கிறது.
ஒன்றிய அரசு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே நிதி கொடுத்துள்ளது. மாநில அரசு மீதிப் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளது. கடனைத் திரும்பச் செலுத்துவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பு தமிழ்நாடு அரசுதான் என ஒப்பந்தம் போட்டுள்ளது. ரூ.7 ஆயிரம் கோடியை கொடுத்துவிட்டு ரூ.63 ஆயிரம் கோடி கொடுத்ததாக சொல்வதில் என்ன நியாயம் உள்ளது?
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை கடந்த 4 ஆண்டுகளாகத் தரவில்லை. குறிப்பாக கல்வித் துறைக்கு தரவேண்டிய நிதியைத் தரவில்லை. மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என சொல்கிறது. அந்த அரசியல் அமைப்பு சட்டப்படிதான் இருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தை குப்பையில் தூக்கிப் போட்டு விட்டார்கள்.
தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராகக் கொதித்தெழுந்தது தமிழ்நாடு மட்டும் தான். ஒருபோதும் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டேன் என முதலமைச்சர் சொல்கிறார்.
மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க வேண்டும் என அனைத்துக் கிராமத்தில் உள்ள பெண்களும் நினைக்கிறார்கள். 234 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லும் வேட்பாளருக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர்.
பாஜகவுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ள தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா? என்பதே கேள்விகுறி.பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை வைத்துக் கொண்டுதான் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வரப்போகிறது என்பதை அமித் ஷா சொன்னார். எடப்பாடி பழனிச்சாமியை டெல்லிக்கு அழைத்து வரச் செய்தும் அதையே தான் சொன்னார்.எதிர்க்கட்சித் தலைவர் சுயமாகச் சிந்திக்க கூடியவர். அவர் நல்ல முடிவை எடுப்பார். பாஜகவிடம் ஒரு முடிவு தெளிவாக இருக்காது. எதைக் கேட்டாலும் டெல்லியில் முடிவு செய்வார்கள் என்று தான் சொல்லிவிடுவார்கள்
இவ்வாறு சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
பிரிந்து கிடக்கும் அதிமுக ஒருங்கிணைந்தால்தான் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறமுடியும் என்பதால் அதை ஒருங்கிணைக்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டுவருகிறது. இதில் இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது என்று டிடிவி.தினகரன் சொல்லியிருக்கிறார்.
இந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் தொடரமாட்டார் என்று அப்பாவு சொல்லியிருக்கிறார்.எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக ஒருங்கிணைவதில் விருப்பமே இல்லை,தானே தனித்தலைவராக நீடிக்க விரும்புகிறார் என்பதற்கு வலுச்சேர்க்கும் விதமாக இந்தக் கருத்து இருக்கிறது, இது கவனிக்கத்தக்க ஒன்று என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


