ஒருங்கிணையும் அதிமுக – தொண்டர்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது….

கீழடியில் பல்வேறு தொன்மையான பொருட்கள் கிடைத்தாலும் அதன் காலம் உள்ளிட்டவற்றை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அதைத் தான் ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார்.

பிளவுபட்ட அதிமுகவை ஓரணியில் கொண்டு வர அமித்ஷா முயற்சி செய்தார். அது அப்போது சாத்தியமாகவில்லை. அதே சமயம் 2026 தேர்தலில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரையும் ஓரணியில் இணைக்கும் அமித்ஷாவின் முயற்சி இப்போது வெற்றி பெற்றுள்ளது.அதனால் தேர்தலில் உறுதியான வெற்றி கிடைக்கும்.

தமிழ்க் கடவுள் முருகனுக்கு மாநாடு நடத்துவதில் தவறில்லை. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையப்போவது உறுதி. இது கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும் இருக்கும். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்தும் இருக்கும்.

பாமக பிரச்னையில் பாஜக தலையிடுவதில் தவறு இல்லை. ஏனென்றால் 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவோடு, பாமக கூட்டணி வைத்தது. கூட்டணி கட்சி என்ற முறையில் பாஜக தலையிடுவதில் தவறில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பேட்டியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரையும் ஓரணியில் இணைக்கும் முயற்சி அமித்ஷாவின் முயற்சி இப்போது வெற்றி பெற்றுள்ளது என்று கூறியிருப்பதன் மூலம் சசிகலா,ஓபிஎஸ்,இபிஎஸ் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படவிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.டிடிவி.தினகரனின் இந்தத் தகவல் அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

Leave a Response