ரஜினி ஒரு இரண்டுங்கெட்டான் – தெறிக்கும் விமர்சனங்கள்

அமித் ஷாவின் இந்தி மொழி பற்றிய பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, நம் நாடு என்றில்லை. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நல்லது. அது முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது. துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில், இந்தியாவில் பொதுவான மொழியைக் கொண்டு வர முடியாது.

எந்த மொழியையும் நம்மால் திணிக்க முடியாது. முக்கியமாக இந்தியைத் திணித்தால் தமிழகத்தில் மட்டுமில்லை, தென் இந்தியாவில் எந்த மாநில மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன் இந்தித் திணிப்பை வட இந்தியாவே ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சில், இந்தியாவுக்கு ஒரே மொழி இருக்கவேண்டும் என்கிற கருத்தை ஏற்றுக்கொண்டிருப்பது தெரிந்தது.

இதனால், சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். சங்கி ரஜினி என்கிற ட்விட்டர் குறிச்சொல் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

ரஜினியின் இந்தக் கருத்து தொடர்பாக சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்,

ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் அவர் பாஜகவுக்கு ஆதரவு சூழல் எப்போது தேவையோ, பாஜக எப்போது பிரச்சினைகளில் சிக்குகிறதோ அப்போது மட்டும் பேட்டி அளிக்கிறார்.

இந்தித் திணிப்பு குறித்து குழப்பமாகத்தான் ரஜினி பேசியிருக்கிறார். பொதுவான மொழி இருக்கவேண்டும் என்கிறார். இது வாழைப்பழத்தில் வழுக்கிவிட்டுப் பேசியது போல உள்ளது. இதே கருத்தை அவரை கர்நாடகாவில் போய் பேசச் சொல்லுங்கள். இந்தி விவகாரத்தில் அங்கேயே பாஜகவை எதிர்த்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா தீர்மானம் போட்டிருக்கிறார்.

பாஜகவின் குரலாகத்தான் ரஜினி ஒலிக்கிறார். பேனர் விவகாரத்தில் ரஜினி கருத்து சொன்னாரா? ஏன் அதுகுறித்து அவர் வாய் திறக்கவில்லை? தமிழக மக்களுக்குத் தேவையான செய்திகளுக்கு அவர் வாய் திறக்க மாட்டார். ரஜினி பாஜகவின் ஊதுகுழல். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு ரஜினியின் கருத்துகள் முழுக்க பாஜகவுக்கு ஆதரவாகவே உள்ளது. இந்தியை அவர் எதிர்க்கட்டும் அல்லது ஆதரிக்கட்டும். இரண்டும் கெட்டானாக அவர் பேச வேண்டாம் என்றார் ஜெ.அன்பழகன்.

இப்படி பல திசைகளிலிருந்தும் அவர் மீது விமர்சனங்கள் பாய்ந்தன.

Leave a Response