விராட் கோலி அபாரம் – இந்திய அணி வெற்றி

தென்ஆப்பிரிக்க மட்டைப்பந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் இரத்தான நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு நடந்தது.

தென்ஆப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா, ஜோர்ன் போர்ச்சுன், அன்ரிச் நார்ஜே ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். இந்திய அணியில் ஷிகர் தவான் வாய்ப்பு பெற்றதால், லோகேஷ் ராகுல் இடம் பெறவில்லை.

‘டாஸ்’ வென்ற விராட் கோலி முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக்கும், ரீஜா ஹென்ரிக்சும் களம் புகுந்தனர்.

கோலி முதல் ஓவரை சுழற்பந்து வீச்சு மூலம் (வாஷிங்டன் சுந்தர்) தாக்குதலை தொடங்கினார். அந்த ஓவரில் 6 ரன்கள் எடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓட விட்ட குயின்டான் டி காக் சீரான வேகத்தில் ரன்களை திரட்டினார். ஹென்ரிக்ஸ் 6 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து பவுமா வந்தார்.

டி காக்-பவுமா ஜோடியினர் அணியின் ஸ்கோரை ஓரளவு நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது ஸ்கோர் 160 ரன்களை கடக்கும் போல் தோன்றியது.

ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் அவர்களின் ரன்வேகத்துக்கு இந்திய பவுலர்கள் முட்டுக்கட்டை போட்டனர். தனது 3-வது அரைசதத்தை எட்டிய குயின்டான் டி காக் (52 ரன், 37 பந்து, 8 பவுண்டரி) ஸ்கோர் 88 ரன்களை எட்டிய போது, நவ்தீப் சைனி வீசிய பந்தை தூக்கியடித்த போது அதை விராட் கோலி பாய்ந்து விழுந்து அருமையாக கேட்ச் செய்து, ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார்.

அடுத்து வந்த வான்டெர் துஸ்சென் (1) பந்து வீசிய ஜடேஜாவிடமே சிக்கினார். இதன் பிறகு அவர்களின் ரன்ரேட் வெகுவாக தணிந்தது. இன்னொரு பக்கம் நிலைத்து நின்று ஆடிய அறிமுக வீரர் பவுமா 49 ரன்களில் (43 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். எதிர்பார்க்கப்பட்ட ‘அதிரடி மன்னன்’ டேவிட் மில்லர் (18 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் பெலக்வாயோவும், பிரிட்டோரியசும் தலா ஒரு சிக்சர் அடித்து அந்த அணிக்கு ஆறுதல் அளித்தனர்.

20 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அடுத்து 150 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் அடியெடுத்து வைத்தனர். நார்ஜேவின் ஓவரில் 2 சிக்சரை விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய ரோகித் சர்மா 12 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதையடுத்து தவானுடன், விராட் கோலி கைகோர்த்தார். இருவரும் அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். தவான் தனது பங்குக்கு 40 ரன்கள் (31 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். தவான் தூக்கியடித்த பந்தை டேவிட் மில்லர் எல்லைக்கோடு அருகே ‘டைவ்’ அடித்து ஒற்றைக்கையால் பிரமாதமாக கேட்ச் செய்து சிலிர்க்க வைத்தார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவரது 49-வது கேட்ச் இதுவாகும். அடுத்து வந்த ரிஷாப் பண்ட் (4 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய கோலி தனது 22-வது அரைசதத்தை நிறைவு செய்தார். அத்துடன் ரபடாவின் ஓவரில் அட்டகாசமான ஒரு சிக்சரை பறக்க விட்டு அமர்க்களப்படுத்தினார். மேலும் சில சிக்சர்களை விளாசிய கோலி கடைசி வரை களத்தில் இருந்து இலக்கை எட்ட வைத்தார்.

இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 72 ரன்களுடனும் (52 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 16 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

விராட் கோலி 72 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்ததோடு, சில சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சக வீரர் ரோகித் சர்மாவை (97 ஆட்டத்தில் 2,434 ரன்) கோலி முந்தினார்.

கோலி 71 ஆட்டங்களில் விளையாடி 2,441 ரன்கள் சேர்த்துள்ளார். கோலிக்கு இது 22-வது அரைசதமாகும். இதன் மூலம் அதிக முறை 50 ரன்களை கடந்த சாதனையாளராகவும் கோலி திகழ்கிறார். இந்த வகையில் ரோகித் சர்மா 2 வது இடத்தில் (21 முறை 50 ரன்களை கடந்துள்ளார்) உள்ளார்.

Leave a Response