பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை – முதலமைச்சர் மருமகன் கைது

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகனும் தொழிலதிபருமான ரதுல் புரி, இந்துஸ்தான் பவர்புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள ரதுல் புரியின் வீட்டை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. மேலும் மொரீசியசை சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெற்று வைத்திருந்த அன்னிய நேரடி முதலீட்டு தொகை 40 மில்லியன் டாலரும் (சுமார் ரூ.284 கோடி) முடக்கப்பட்டது.

பினாமி சொத்து பரிமாற்றச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முறைகேடு தொடர்பாக ரதுல் புரியின் தந்தையும், கமல்நாத்தின் மைத்துனருமான தீபக் புரி மீதும் விசாரணை நடந்து வருகிறது. ரதுல் புரி மீது ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கிலும் விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, ரூ.354 கோடி அளவிலான வங்கிக் கடன் மோசடி வழக்கில், ரதுல் புரி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியே இது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response