விழுப்புரத்திலும் பிரபாகரன் சிலை.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதி சடையாண்டிகுப்பம். இக் கிராமத்தில் ஊருக்கு வெளியே அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இங்கு 2010ஆம் ஆண்டு காவல் தெய்வம் வீரனுக்கு 25 அடி உயர சிலை எழுப்பப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 25-3-2010-ல் வீரன் சிலைக்கு வலது புறத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சிலையும், வலது புறத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் சிலையும் நிறுவினர். இவ்வாறு பிரபாகரன், வீரப்பன் சிலைகள் அமைக்கப்பட்ட விவரம் கண்டமங்கலம் காவல்துறையினருக்கு தற்போதுதான் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பிரபாகரன் சிலையின் தொப்பியில் விடுதலைப் புலிகளின் சின்னமும், துப்பாக்கியும் கையில் இருந்தன. இதுபோல் மறுபுறத்தில் பெரிய மீசையுடன் வீரப்பன் சிலையும் இருந்தது.

இதனைப் பார்த்த போலீஸார் அச் சிலைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கிராமமக்களிடம் வலியுறுத்தினர். ஆனால் பொதுமக்கள் மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பிரபாகரன் தொப்பியில் உள்ள விடுதலைப்புலிகள் சின்னம் அகற்றப்பட்டது. வீரப்பன் சிலையின் கட்டை மீசையும் மாற்றி அமைக்கப்பட்டது. இது குறித்து கண்டமங்கலம் போலீஸாரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட கோயிலில் உள்ள சிலைகளால் ஏற்படும் பிரச்னை குறித்து எடுத்துக்கூறி அவர்கள் சம்மதத்துடன் சிலைகளை முழுவதுமாக அகற்றாமல் உருவம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Response