
கனடா – அமெரிக்கப் பயணம் பன்முகப்பட்டதாகவும் பயனுள்ளதாகவும் அமையவேண்டும் என்ற நோக்கில் தனது பயணத்திட்டத்மத அமமத்துக் கொண்டுள்ள மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், 15.06.2015 ஆம் நாள் நியூயார்க் நகரில் ‘நாடுகடந்த தமிழீழஅரசாங்க’த்தின் பிரதமர் மாண்புமிகு ருத்ரகுமாரன் அவர்களைச் சந்தித்தார்.
நீண்ட நேரம் இருவரும் உரையாடல் நடத்தினர். இன்றைய சூழலில் உலகமெங்கும் பரவிக்கிடக்கிற இலங்கைத் தமிழர்களின் நிலைமை, தமிழீழ அரசாங்கத்தின் பணிகள்,
இவ்வரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள், தமிழ்நாடு அரசாங்கம்
எடுக்கவேண்டிய முன்முயற்சிகள், ஐ.நா.சபைக்கு இவ்வரசு முன்வைத்துள்ள கோரிக்கைகள், இலங்கைத் தமிழர்களுக்கு மற்ற நாடுகளில் வாழும் தமிழர்கள்செய்யவேண்டிய உதவிகள் போன்ற முக்கிய அம்சங்கள் இவர்களின் உரையாடலில் இடம்பெற்றது.
“இந்து மகாசமுத்திரம் பெரும்பாலும் தமிழ்மக்கள் அதிகமாக வாழும்நிலப்பரப்பை ஒட்டியுள்ள பகுதியாகும். தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் மண்பரப்பைச் சூழ்ந்தும் அருகிலும் இந்து மகாக்கடல் உள்ளது.
இன்று உலக அளவில் வணிகத்திற்குப்பெரும் பயன்பாடாக உள்ளது இக்கடல். இருப்பினும் தமிழர்கள் எந்நாட்டாலும் ஒருபொருட்டாக எடுத்துக்கொள்ளப்படுவதே கிடையாது. தமிழர்களை
எவ்வகையிலும் சம்பந்தப்படுத்தாமலேயே நமது கடல் பகுதி பல ஆதிக்க நாடுகளால் சுலபமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு கட்டாயம் தமிழர்களுக்கு வேண்டும்” என்று தனது ஆழ்ந்த கவலையை, எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார் ருத்ரகுமாரன்.
தமிழீழம் உட்பட எவ்வகையான அரசாங்கத்தை அல்லது அரசு முறையைஇலங்கையில் உருவாக்க வேண்டும் என்று உலமெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரும்புகிறார்கள் – எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுத்து வருதாகவும் ருத்ரகுமாரன் குறிப்பிட்டார்.
115 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைச்சரவையில் பிரதமர் மட்டுமல்லாது அந்தந்தத் துறைசார்ந்த அமைச்சர்களும் உள்ளனர் என்றும் நாடாளுமன்றக் கூட்டம் இரண்டு, மூன்று மாதங்களுக்கொருமுறை ஏதாவதொரு நாட்டில் கூடுவதாகவும் மாதமொருமுறை ‘Conference Call’ மூலம் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அந்தந்த நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்கள் வாக்களித்துத் தேர்வு செய்வதாகவும் தெரிவித்தார். அரசியல், மொழி, பண்பாடு, சட்டம், மனித உரிமைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்த – ஆழமும் அர்த்தமும் மிக்க உரையாடலாக இது அமைந்தது என்று ஸ்டாலின்குணசேகரன் தெரிவித்திருக்கிறார்.


