முத்தலாக் – அரசியல் கட்சிகளின் நிலை மற்றும் சட்டம் சொல்லும் முக்கிய அம்சங்கள்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் சட்ட முன்வடிவு மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 30.2019) நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே இச்சட்ட முன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டதால்,குடியரசுத்தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து விரைவில் சட்டம் அமலுக்கு வருகிறது.

மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இருந்து வந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2017 இல் தடை விதித்தது.

அதைத் தொடர்ந்து ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’ என்ற முத்தலாக தடைக்கான சட்டமுன்வடிவை அமல்படுத்த மத்திய அரசு முயன்றது.

ஆனால், 3 முறை அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், பாஜவின் கடந்த ஆட்சியில் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில், இந்த சட்டமுன்வடிவு ஜூலை 25 ஆம் தேதி மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து, முத்தலாக் சட்ட முன்வடிவை மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

இம்மசோதா ஓட்டு வங்கி அரசியலுக்காகவோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ கொண்டு வரப்படவில்லை. பெண்களுக்கு நீதி கிடைக்கவும், அவர்களின் கண்ணியம், அதிகாரம் காக்கப்படவும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தவும் கொண்டு வரப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளே முத்தலாக்கை தடை செய்துள்ளன. ஆனால் மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் ஒரு சில காரணங்களால் இதை தடை செய்ய முடியாதது துரதிஷ்டவசமானது.

முத்தலாக்கிற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும், சட்டவிரோத அந்த செயல் நின்றபாடில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 574 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. சட்டத்தால் மட்டுமே குற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து சட்டமுன்வடிவு மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத் பேசுகையில்,

அரசியல் உந்துதலால் கொண்டு வரப்பட்ட சட்டம் இது. இதன் உண்மையான நோக்கம், முஸ்லிம் குடும்பங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். இஸ்லாமில் திருமணம் என்பது சிவில் ஒப்பந்தமாகும். அதற்கு சட்டத்தின் மூலம் கிரிமினல் சாயம் பூசப்படுகிறது.

முத்தலாக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்ற ஒருவர் சிறை சென்றால், அவரது மனைவியின் குடும்ப செலவுக்கு 3 ஆண்டு அரசு நிதி உதவி செய்யுமா? சிறை தண்டனை அனுபவித்த பின் அந்த ஆண், நிம்மதியாக குடும்ப வாழ்க்கையைத் தொடர முடியுமா?

இது உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கொண்டு வரப்பட்ட சட்டம் என்று கூறும் அரசு, 1947 முதல் சிறுபான்மையினர் சம்மந்தப்பட்ட தீர்ப்புகள் அத்தனைக்கும் சட்டம் கொண்டு வந்திருக்கிறதா? அவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் சட்டமாக்கப்பட்டுள்ளதா? உச்ச நீதிமன்றத்தை மதிப்பதாக இருந்தால் கும்பல் கொலையைத் தடுக்க சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டுமே?. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதுதான் பாஜவின் உண்மையான எண்ணம் என்றால், 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வராதது ஏன்? என்றார்.

திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில்,

இந்த மசோதாவுக்கு பின்னால் சில மறைமுகத் திட்டங்கள் உள்ளன. குறிப்பிட்ட ஒரு பிரிவு மட்டுமே தொடர்ந்து இலக்காக்கப்பட்டு வருகிறது.

முத்தலாக்கிற்கு சிறை தண்டனை என்பது கூடாது. இம்மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் இளமரம் கரீம் பேசுகையில், ‘‘மனித உரிமை மீதான அத்துமீறல் இந்த மசோதா’’என்றார்.

இதே போல, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மக்களவையில் இதற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. அதே போல, பாஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளமும் எதிர்ப்பு தெரிவித்தது. பாஜ கூட்டணியில் இல்லாத பிஜூ ஜனதா தளம் மசோதாவுக்கு ஆதரவு தருவதாக கூறியது.

சுமார் நான்கரை மணி நேர விவாதத்திற்குப் பின், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசுகையில், ‘‘இந்துக்கள் பலதார மணம், வரதட்சணை தடை சட்டம் போன்றவற்றிலும் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1986ல் ஷா பானோ விவகாரத்து வழக்கிலேயே பெண்களின் உரிமையை மீட்பதற்கான நடவடிக்கையை காங்கிரஸ் செய்திருக்க வேண்டும். இதேபோல 2017ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத்தான் இந்த அரசு சட்டமாக்குகிறது. நான் மோடி அரசின் அமைச்சர், ராஜிவ்காந்தி அரசின் அமைச்சர் அல்ல. முஸ்லிம் நாடுகளே மறுசீர்த்திருத்தத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஜனநாயக நாட்டில் ஏன் முடியாது? நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அந்த மதத்தை சேர்ந்தவரை ஜனாதிபதி ஆக்கியதுதான் இந்த அரசு’’ என்றார்.

இதையடுத்து, மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. இதில், தீர்மானத்திற்கு எதிராக 100 வாக்குகளும், ஆதரவாக 84 வாக்குகளும் பதிவாகின. இதனால், மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.

பின்னர், மசோதாவை நிறைவேற்ற நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவான. இதைத் தொடர்ந்து, முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஏற்கனவே மக்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால்,குடியரசுத்தலைவரின் ஒப்புதலை அடுத்து, இது சட்டமாக்கப்பட உள்ளது.

242 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற 121 எம்பிக்களின் ஆதரவு தேவை. இங்கு பாஜ கூட்டணிக்கு 107 உறுப்பினர்களே உள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக போன்ற கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மசோதா நிறைவேற்ற அரசுக்கு உதவும் வகையில் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

பாஜ கூட்டணியில் உள்ள பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அரசுக்கு எதிராக ஓட்டெடுப்பில் வாக்களிக்கும் அவர்களும் வெளிநடப்பு செய்து நழுவிக் கொண்டனர். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சில எம்பிக்கள் அவைக்கு வராமலும் ஓட்டெடுப்பை புறக்கணித்தும் அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்டன. இதன் மூலம் இக்கட்சிகளின் இரட்டை வேடம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இதே யுக்தியைத்தான் சர்ச்சைக்குரிய ஆர்டிஐ சட்ட திருத்த மசோதா நிறைவேற்றும் விஷயத்திலும் சில கட்சிகள் செய்தன.

முத்தலாக் சட்டமுன்வடிவு விசயத்தில் அதிமுக நேற்று முரண்பாடாக நடந்து கொண்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

மக்களவையில் இம்மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற அதிமுகவின் ரவீந்திரநாத் குமார், ‘‘இந்த மசோதா மூலம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமைகள் கிடைக்கும். இந்த மசோதா, இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து பெண்களுக்கும் சம உரிமை வழங்கிட ஏதுவாக இருக்கும்’’ என ஆதரித்து பேசினார். இது, தமிழக சிறுபான்மையினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாநிலங்களவையில், முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அக்கட்சி உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ‘‘முத்தலாக்கிற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து தீர்ப்பளித்து விட்டது. இஸ்லாமில் முத்தலாக் அங்கீகரிக்கப்படவில்லை என அரசு சொல்கிறது. எனவே, இல்லாத ஒரு விஷயத்திற்காக எதற்காக சட்டம்? எனவே இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’’ என்றார்.

நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘தொன்மையான, இடைக்கால நடைமுறை வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளது. முத்தலாக் நீக்கப்பட்டு, முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டுள்ளது. இது பாலின நீதியின் வெற்றி, சமூகத்தில் மேலும் சமத்துவத்தை ஏற்படுத்தும். இந்தியா இன்று மகிழ்ச்சி அடைகிறது’’ என கூறி உள்ளார்.

அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமர் மோடி தனது வாக்குறுதியை இன்று நிறைவேற்றி இருக்கிறார்’’ என கூறி உள்ளார்.

முத்தலாக் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்….

1. ஒரே நேரத்தில் தலாக், தலாக், தலாக் என மூன்று முறை வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப் போன்ற குறுந்தகவல் மூலமாகவோ கூறுவது சட்ட விரோதமாகும்.

2. இதை மீறும் கணவன்மார்களுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

3. குற்றம்சாட்டப்பட்ட நபர் மாஜிஸ்திரேட்டை அணுகி மட்டுமே ஜாமீன் பெற முடியும்.

4. பாதிக்கப்பட்ட பெண், கணவரிடமிருந்து நிதி உதவி கோரலாம். எவ்வளவு தொகை என்பதை விசாரணையின் போது, மாஜிஸ்திரேட் முடிவு செய்வார்.

5. பாதிக்கப்பட்ட பெண் தனது மைனர் குழந்தைகளை தன்னுடன் வைத்துக் கொள்ளலாம்.

Leave a Response