ஆயிரம் தமிழறிஞர்கள் பட்டினிப் போராட்டம்.

தமிழைக் காக்க 1,000 தமிழறிஞர்கள் பங்கேற்கும் பட்டினிப் போராட்டத்தை நடத்த வளர்தமிழ் இயக்கம் முடிவு செய்துள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக இந்தப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவரும், பேரூர் ஆதீனத்தின் இளைய மடாதிபதியுமான மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி இல்லை; ஆட்சி நிர்வாகத்தில் தமிழ் இல்லை; இசை – நாடகத் துறையில் தமிழ் இல்லை; இந்த அவல நிலை நீடிக்கவிடக் கூடாது. ஏற்கெனவே 100 தமிழறிஞர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நல்ல பலனைத் தந்தது.

அதேபோல, மாநிலம் முழுவதும் இருந்து 1,000 தமிழறிஞர்கள் பங்கேற்கும் பட்டினிப் போராட்டத்தை நடத்த வேண்டும்.

அதற்கு முன்னதாக மாவட்டம்தோறும் வளர்தமிழ் இயக்கத்துக்கு பொறுப்பாளர்களை நியமித்து, மாநாடுகளையும் பரப்புரைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார் மருதாசல அடிகளார்.

கூட்டத்தை இலக்கிய விமர்சகர் வீ.ந. சோமசுந்தரம் நெறிப்படுத்தினார். திருச்சி மாவட்டத்தில் முனைவர் கு. திருமாறன் தலைமையிலான குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

பேராசிரியர் தா. மணி, திருக்குறள் சு. முருகானந்தம், புலவர் தமிழழகன், கவிஞர் கவித்துவன், கவிஞர் ராசா ரகுநாதன், தமிழ்ச் சங்க அமைச்சர் சிவக்கொழுந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Response