சன் தொலைக்காட்சிக்கு மத்திய சட்ட ஆலோசகர் ஆதரவு

சன் தொலைக்காட்சி குழும அலைவரிசைகளுக்கான உரிமங்களை புதுப்பிக்கும் விவகாரத்தில், பாதுகாப்பு தொடர்பான ஒப்புதலை வழங்க மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனுக்கு எதிராக விசாரிக்கப்பட்டு வரும் ஊழல் வழக்குகளைக் காரணம் காட்டி, பாதுகாப்பு தொடர்பான ஒப்புதலை மறுக்க இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சன் குழுமம், அதன் 33 தொலைக்காட்சிகளின் உரிமங்களை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிப்பதற்காக, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது.
ஆனால், உரிமங்களை புதுப்பிக்கத் தேவையான பாதுகாப்பு ஒப்புதலை வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தில், தலைமை சட்ட ஆலோசகரின் கருத்தை கேட்பதற்காக மத்திய சட்டத்துறை அமைச்சகத்தை, செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அணுகியது. இந்நிலையில், தலைமை சட்ட ஆலோசகர் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார். பொதுவாக, ஒரு விவகாரத்தில் இரு அமைச்சகங்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, தலைமை சட்ட ஆலோசகரின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும்.
எனினும், இறுதி முடிவுக்காக இந்த விவகாரம் அமைச்சகங்கள் இடையிலான குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
உள்துறை ஆட்சேபம்: சன் தொலைக்காட்சி குழும அலைவரிசைகளுக்கு பாதுகாப்பு ஒப்புதலை வழங்குவதற்கு ஆதரவாக தமைமை சட்ட ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அது நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வது போன்றதாகும் என மத்திய உள்துறை அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
“நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பை பாதிக்கும் என்பதால் பண மோசடிக் குற்றங்கள் உலகம் முழுவதும் மிக தீவிரமாக பார்க்கப்படுகிறது.
சன் குழுமத் தலைவரான கலாநிதி மாறன், அவரது சகோதரரான முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் அதேபோன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணையை சந்தித்து வருகின்றனர்.
சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் கூறுவதன்படி, நாட்டின் பாதுகாப்பில் இருந்து பொருளாதாரப் பாதுகாப்பு வேறுபட்டதல்ல. இச்சட்டப் பிரிவுகளை கவனத்தில் கொண்டும், மாறன் சகோதரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலுமே உள்துறை முடிவெடுத்தது’ என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Response