யோகா பரப்புரை முஸ்லிம்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது–கே.எம்.ஷெரிப்

உடல் பயிற்சியை மத, அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் கே.எம்.ஷெரீப் தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

உலக யோகா தினத்தை உடல் பயிற்சிக்கான நாளாகக் கருதாமல், அதை அரசியல் ஆதாயத்துக்காகக் கடைப்பிடிப்பது சரியல்ல. யோகா மற்றும் உடல் பயிற்சிகளில் அரசியலையும், மதத்தையும் இணைப்பது வேடிக்கையாக உள்ளது.

யோகா அதன் மூல வடிவத்தில் தற்போது இல்லை. சூரிய நமஸ்காரத்தில் உள்நோக்கத்திற்காக சிலவற்றை சேர்த்துள்ளனர். யோகா பயிற்சியை ஊக்குவிக்கும் அரசு, அதன் விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இந்துத்துவா அமைப்பினருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறுபான்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள உலக யோகா தின நிகழ்ச்சி பட்டியலில், சூரியநமஸ்காரம் இல்லாத நிலையிலும், இந்துத்துவா அமைப்பினருக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது சந்தேகத்திற்கு இடமளித்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தனது பயிற்சியில் ஒருசில யோகாசனங்களைச் சேர்த்து அதை 2007 முதல் கடைப்பிடித்து வருகிறது.

இதில் மதமோ அரசியலோ இல்லை. கடந்த பல ஆண்டுகளாக அமல்படுத்திவரும் “ஆரோக்கியமான மக்கள், ஆரோக்கியமான இந்தியா’ திட்டத்தில் யோகாசனத்தைச் சேர்த்து, அதன் ஆசனங்கள் பலவற்றை பிரசாரம் செய்து வருகிறோம்.

இந்த பயிற்சிக்கு சிறுபான்மையினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் யோகா பிரசாரம் சிறுபான்மையினரின் அச்சத்திற்கு இடமளித்துள்ளது.

யோகா பயிற்சி இந்துக்களின் திருவிழா என்பதை போன்ற தோற்றத்தை இந்துத்துவா அமைப்பினர் ஏற்படுத்தி வருகின்றனர் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response