இந்தியாவை நேசிப்பவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ராகுல்காந்தியின் கடிதம்

அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் தலைவர் பதவி விலகல் தொடர்பாக இராகுல்காந்தி எழுதிய கடிதத்தின் தமிழாக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ளது. அதில்…..

காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். காங்கிரஸ் கட்சியின் விழுமியங்களும், கொள்கைகளும் நமது அழகான நாட்டின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் பணியாற்றி வருகிறது. இந்த நாட்டுக்கும் எங்களது இயக்கத்திற்கும் அன்போடும் நன்றியோடும் நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கட்சி தோல்வியுற்றதற்கு நான் பொறுப்பேற்கிறேன். நமது கட்சியின் வளர்ச்சிக்கு இப்படி பொறுப்பை ஏற்பது இத்தருணத்தில் மிகவும் முக்கியமானது. இந்தக் காரணத்திற்காகத்தான் நான் காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினேன்.

கட்சியை மீண்டும் கட்டியமைக்க கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்கு ஏராளமானோர் பொறுப்பேற்க வேண்டியும் உள்ளது. ஆனால், மற்றவர்களைப் பொறுப்பாக்கிவிட்டு, கட்சித் தலைவர் என்ற முறையில் எனது பொறுப்பைத் தட்டிக் கழிப்பது நியாயமாகாது.

எனது சகாக்கள் பலர் நானே மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று ஆலோசனை கூறினர். புதிய தலைவர் ஒருவர் பொறுப்பேற்கும் முக்கியமான சூழ்நிலையில் அத்தகைய நபரை நானே தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது. நமது கட்சி நீண்ட பாரம்பரியமும் வரலாறும் கொண்ட இயக்கமாகும். கட்சியின் போராட்டத்தையும் கண்ணியத்தையும் நான் பெரிதும் மதிக்கிறேன். காங்கிரஸ் கட்சி இந்தியாவுடன் பின்னப்பட்டிருக்கிறது. கட்சி நம்பகத்தன்மை, அன்பு, துணிவு ஆகியவை கொண்ட உரிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கட்சி சிறந்த முடிவை எடுக்கும் என நம்புகிறேன்.

நான் பதவி விலகியவுடனே காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இருந்த எனது சகாக்களிடம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிவகையைக் கண்டறிய குழுவிடம் அளிக்கலாம் என்று யோசனை கூறினேன். அவ்வாறு செயல்பட அவர்களுக்கு உரிய அதிகாரமும் அளித்துள்ளேன்.

அத்துடன் புதிய தலைமை மாற்றம் சுமுகமாக நிறைவேறும் வகையில் அவர்களது பணிக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளேன்.

எனது போராட்டம் அரசியல் அதிகாரத்துக்கான சாதாரணமான போராட்டமல்ல. பாஜக மீது எனக்கு வெறுப்போ, பகைமையோ இல்லை.

எனது உடலின் ஒவ்வொரு அணுவும் அவர்களது இந்தியா குறித்த கொள்கைகளை முழுமையாக எதிர்க்கிறது. எனக்குள் ஊடுருவியுள்ள இந்திய சிந்தனை காரணமாக இந்த எதிர்ப்பு உருவாகியுள்ளது.

அதனால், அவர்களது கொள்கைகளுடன் நேரடியாக மோதுகிறது. இது புதிய போராட்டமல்ல. இப்போர் ஆயிரம் ஆண்டுகளாக நமது மண்ணின் மீது தொடுக்கப்பட்ட போராகும்.

அவர்கள் வேற்றுமையைக் காண்கிறார்கள். நான் ஒற்றுமையைக் காண்கிறேன். அவர்கள் பகைமையைக் காண்கிறார்கள். நான் அன்பினைக் காண்கிறேன். அவர்கள் அச்சப்படுவதையெல்லாம் நான் அரவணைக்கிறேன்.

கருணை நம் நாட்டு கோடானுகோடி குடிமக்களின் இதயங்களில் ஊடுருவியுள்ளது. இந்தியாவின் இந்த சிந்தனையைத்தான் நாம் இப்போது பாதுகாக்கிறோம்.

நமது தேசத்தின் பின்னிப் பிணைந்த நிலையைச் சிதைப்பதற்காக நம் நாட்டின் மீதும் நாம் நேசிக்கும் அரசியல் சாசனத்தின் இப்போது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு எதிரான போராட்டத்திலிருந்து நான் எந்த வடிவலும் எந்த நிலையிலும் பின் வாங்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் விசுவாசம் மிக்க போராளி நான். இந்தியாவின் அர்ப்பணிப்புள்ள மகன் நான். தொடர்ந்து பணியாற்றி, இந்திய அன்னையைப் பாதுகாக்க இறுதி மூச்சு வரையில் பாடுபடுவேன்.

நாம் வலுவான, கண்ணியமான தேர்தலை எதிர்கொண்டோம். நமது பிரசாரம் சகோதரத்துவம், சகிப்புத் தன்மை கொண்டு, பல்வேறு மதங்கள், இனங்களைக் கொண்ட அனைத்து இந்தியர்களையும் மதிக்கும் வகையிலும் இருந்தது.

நான் தனிப்பட்ட முறையில் பிரதமரையும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் அவர்கள் கைப்பற்றிய அனைத்து நிறுவனங்களையும் களத்தில் சந்தித்தேன். நான் இந்தியாவை நேசிக்கிறேன். அதனால், போராடினேன்.

பல காலமாகக் கட்டியமைக்கப்பட்ட இந்தியாவின் கோட்பாடுகளைப் பாதுகாக்க நான் போராடினேன். ஒரு கட்டத்தில் நான் தனித்து விடப்பட்டேன். அதற்காகப் பெருமை கொள்கிறேன். நமது தொண்டர்கள், உறுப்பினர்களின் அன்பு, தகைமை ஆகியவற்றைக் கற்றுத் தந்த ஆண்கள் பெண்கள் ஆகியோரின் உற்சாகத்திலிருந்தும் அர்ப்பணிப்பு உணர்விலிருந்தும் நிறைய கற்றுக் கொண்டேன்.

சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கு நாட்டின் நிறுவனங்களிடம் நடுநிலைமை இருக்க வேண்டும். சுதந்திரமான பத்திரிகைகள், நீதித்துறை, வெளிப்படைத் தன்மை கொண்ட தேர்தல் ஆணையம் ஆகியற்றுக்கு அதிகாரங்கள் இல்லாமல் நியாயமான தேர்தலை நடத்த முடியாது. அதுதான் குறிக்கோள், நடுநிலை தன்மை கொண்டது ஆகும்.

ஒரு கட்சி மட்டும் ஏகபோகமாக நிதி ஆதாரங்களை வைத்துக் கொண்டு செயல்பட்டால் தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது.
2019 ஆம் ஆண்டில் ஓர் அரசியல் கட்சியை எதிர்த்து நாம் போட்டியிடவில்லை. இந்திய அரசின் ஒட்டுமொத்த இயந்திரத்தையும் எதிர்த்துப் போட்டியிட்டோம்.

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கச்சைக் கட்டிக் கொண்டு நின்ற அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் எதிராகப் போட்டியிட்டோம். ஒரு காலத்தில் நடுநிலையுடன் செயல்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் இப்போது இயங்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது.

நம் நாட்டின் நிறுவனங்களின் கட்டமைப்பைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் குறிப்பிட்ட கோட்பாடுகள் இப்போது முழுமையாகிவிட்டன. நமது ஜனநாயகத்தின் அடித்தளமே பலவீனமாகவிிட்டது.

இப்போதிலிருந்து தேர்தல்கள் இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருக்கும் நிலையிலிருந்து வெறும் சடங்கைப் போல் ஆகிவிடும் அபாயம் உள்ளது.

இப்படி அதிகாரத்தைக் கைப்பற்றுவது கற்பனைக்கே எட்டாத அளவிக்கு வன்முறையையும் இந்தியாவுக்குப் பெரிய வலியையும் ஏற்படுத்தப் போகிறது.

விவசாயிகள், வேலையில்லா இளைஞர்கள், பெண்கள், பழங்குடியினர், தலித்கள், சிறுபான்மையினர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படப் போகிறார்கள். நமது பொருளாதாரத்தின் மீது பாதிப்பு ஏற்படும். தேசத்தின் நற்பெயரும் சீரழிக்கப்படும்.

பிரதமரின் வெற்றி அவர் மீதான ஊழல் புகார்களைத் துடைக்கவில்லை. உண்மையின் வெளிச்சத்தை பணமும் பிரசாரமும் மறைத்துவிட இயலாது.

நமது நிறுவனங்களை இந்திய தேசம் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும், உயிர்ப்பிக்க வேண்டும். அதற்கான கருவியாக காங்கிரஸ் கட்சிதான் இருக்கப் போகிறது.

அதை சாதிக்க, காங்கிரஸ் கட்சி தன்னை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டியுள்ளது. இந்திய மக்களின் குரலை பாஜக இன்றைக்கு ஒடுக்கி வருகிறது. அந்தக் குரலுக்குப் பாதிப்பு நேராமல் பாதுகாப்பது காங்கிரஸ் கட்சியின் கடமை. இந்தியாவில் எப்போதும் ஒரு காலத்திலும் ஒரே குரல் ஒலிக்க முடியாது. அது எப்போதும் இணக்கமான குரல்களாக ஒலிக்கும். அதுதான் பாரத மாதா என்ற தத்துவத்தின் சாராம்சம்.

எனக்கு ஆதரவளித்து கடிதங்களையும், செய்திகளையும் அனுப்பிய இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் ஆயிரக் கணக்கான இந்தியர்களுக்கு நன்றி. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்காக நான் தொடர்ந்து சக்தி உள்ள வரையில் பாடுபடுவேன். கட்சிக்கான எனது சேவைகள், ஆலோசனைகள், கருத்துகளை அளிக்க எப்போதும் காத்திருக்கிறேன்.

காங்கிரஸ் கொள்கையை ஆதரிப்போர், குறிப்பாக நமது அர்ப்பணிப்புள்ள அன்புக்குரிய தொண்டர்களுக்கு கூறுகிறேன். நமது எதிர்காலத்தின் மீது அளவற்ற நம்பிக்கையும் உங்கள் மீது அளவில்லா அன்பும் கொண்டிருக்கிறேன். பதவியில் இருப்போர் அந்தப் பதவியைத் துறப்பதில்லை என்பது இந்தியாவில் ஒரு வழக்கமாக இருக்கிறது. ஆனால், அதிகாரத்தின் மீதுள்ள பற்றைக் கைவிடாமல், தீவிரமான கொள்கை அடிப்படையில் போராடாமல் நமது எதிரிகளைத் தோற்கடிக்க முடியாது. நான் காங்கிரஸ்காரனாகப் பிறந்தவன். இக்கட்சி என்னுள் இரண்டறக் கலந்துவிட்டது. இது என் ரத்தம். எப்போதும் இதே நிலைதான் நீடிக்கும்.

ஜெய் ஹிந்த் !
ராகுல் காந்தி

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response