அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னது உண்மையா? – பெ.மணியரசன் கிடுக்கிப்பிடி

ஐட்ரோகார்பனுக்குத் தடை அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு உண்மையா? முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….,

இந்திய அரசு ஐட்ரோகார்பன் எடுக்க திறந்தவெளி உரிமம் வழங்கும் திட்டத்தின் கீழ் (Open Acreage Licensing Policy – OALP) இன்று மூன்றாவது சுற்று ஏலத்தில் நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 459.89 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஓ.என்.ஜி.சி.க்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் இன்னொரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் 1403.41 சதுர கிலோ மீட்டர் ஓ.என்.ஜி.சி.க்கு ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 15ஆம் நாளுடன் முடிவடைந்த ஏலம் கேட்பில் வந்த கோரிக்கைகளை இன்று (03.07.2019) திறந்து ஏல முடிவுகளை இந்திய அரசு அறிவித்துள்ளது. நேற்றைக்கு முதல் நாள் (01.07.2019), மக்களவையில் முன்னாள் நடுவண் அமைச்சர் டி.ஆர். பாலு (தி.மு.க.) ஐட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று பேசியதற்கு விடையளித்த நடுவண் வேதியியல் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் “இதுபற்றி திறந்த மனதுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். மக்கள் கருத்தறிந்து செயல்படுவோம்” என்று கூறினார்.

ஆனால், அடுத்த 2 நாளில் மூன்றாவது கட்டமாக ஐட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

செர்மனியில் இட்லர் ஆட்சி செய்தபோது, முதல் நாள் மாலை மிகப்பெரிய அளவில் மே நாள் விழா கொண்டாடிவிட்டு, மறுநாள் காலை தொழிற்சங்கங்களைத் தடை செய்த நிகழ்வுபோல் இது உள்ளது.

தமிழ்நாட்டு வேளாண்மையை அழித்து, கனிமவேட்டை நிறுவனங்களுக்கு காவிரிப்படுகை உள்ளிட்ட சாகுபடி நிலங்களை ஒப்படைப்பது என்பதில் நரேந்திர மோடி அரசு தீவிரமாக இருப்பதையே இன்றைய ஏல முடிவு அறிவிப்பு தெரிவிக்கிறது.

அதேவேளை, இன்று (03.07.2019) தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஐட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பேசிய தி.மு.க.வினருக்கு விடையளித்த சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் “ஐட்ரோகார்பன் எடுக்க நடுவண் அரசை அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் இக்கூற்று தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வமான முடிவு என்றால், ஏற்கெனவே 2 கட்டத்தில் தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கும், வேதாந்தாவுக்கும் விடப்பட்ட ஏலத்தையும் இன்றைக்கு மூன்றாவது கட்டமாக ஓ.என்.ஜி.சி.க்கு விடப்பட்ட ஏலத்தையும் தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளிவர வேண்டும்.

இல்லையேல், நடுவண் அமைச்சர்களும், தமிழ்நாட்டு அமைச்சர்களும் கூட்டாகப் பேசிக் கொண்டு தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்வதுபோல் மாறுவேடம் போடும் சூழ்ச்சியாகவே இது அமையும்!

தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் எடுக்கக் கூடாதென்று கிட்டத்தட்ட அனைத்து மக்களும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். காவிரி உரிமை மீட்புக் குழு நேற்று (சூலை 2) திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பல்வேறு கிராம மையங்களில் “ஐட்ரோகார்பன் எடுக்காதே! காவிரியைத் தடுக்காதே!” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் திரள் காத்திருப்புப் போராட்டங்களை எழுச்சியுடன் நடத்தியது.

#StopHydrocarbonNotCauvery என்ற முத்திரை முழக்கம் தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் பெருமளவில் முன்னணிப் பரப்புரைப் போக்காக (ட்ரெண்டிங்) மக்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அது மக்களிடையே பேராதாரவைப் பெற்றதைக் கண்டு அஞ்சி அதை முடக்கினார்கள். ஐட்ரோகார்பனைத் தடை செய் என்று வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் ஆங்காங்கே போராடுகிறார்கள்.

இப்பின்னணியில்தான் அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பனை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். ஆனால், நேற்று (02.07.2019) காவிரி உரிமை மீட்புக் குழு திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் காத்திருப்புப் போராட்டம் நடத்திய உழவர்கள் மற்றும் உணர்வாளர்கள் 655 பேர் மேல் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக செய்தி வந்திருக்கிறது. ஏன் இந்த முரண்பாடுகள்?

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குழப்பத்திற்கு இடமில்லாமல் முன்னாள் முதல்வர் செயலலிதா அவர்கள் 2015ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை 186-இன்படி, “தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் குறித்து ஆய்வு செய்யவோ, அதை எடுக்கவோ இந்திய அரசுக்கும் தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்க மாட்டோம்” என்று அறிவிக்க வேண்டும் என்றும், அத்துடன் ஐட்ரோகார்பன் வராமல் தடுக்க வாழ்வுரிமைப் போராட்டம் நடத்திய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனிநபர்கள் அனைவர் மீதும் போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response