திடீரென காணாமல் போன குறிச்சொல் – ஜூலை 2 போராட்ட நிகழ்வுகள்

“ஐட்ரோகார்பன் எடுக்காதே! காவிரியைத் தடுக்காதே!” என்ற முழக்கத்தோடு 02.07.2019 அன்று காவிரிப்படுகை மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு முன்னெடுத்த காத்திருப்புப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான உழவர்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

முன்னதாக, காத்திருப்புப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், காவல்துறையினரின் தடையை மீறி கைது அச்சுறுத்தலுக்கு இடையிலும் இப்போராட்டத்தில் பெருந்திரளான உழவர்களும், பொது மக்களும் தன்னெழுச்சியுடன் பங்கேற்றனர்.

திருச்சி

திருச்சி முக்கொம்பு நுழைவாயில் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், காலை 8.30 மணியளவில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.பா. சின்னதுரை தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர அ.ஆனந்தன், திருச்சி செயலாளர் இலக்குவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மூ.த. கவித்துவன், பாவலர் இராசாரகுநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில், ஐட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் இரா.வேல்சாமி தலைமையில் நடைபெற்றது. ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் சென்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, நாம் தமிழர் கட்சி புதுச்சேரி செயலாளர் முத்.எம்.சிவக்குமார், உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி செயலாளர் கோ.தமிழுலகன், தமிழர் களம் புதுச்சேரி அமைப்பாளர் கோ.அழகர், கைவினைஞர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தனாளன், புதுச்சேரி தமிழ்ச்சங்கப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், புதுவை தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் புதுவை தமிழ்நெஞ்சன், இலக்கியப் பொழில் மன்றம் அமைப்பாளர் பராங்குசம் உள்ளிட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்

திருவாரூரில், தொடர்வண்டி நிலையம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு, தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் ச.கலைச்செல்வம் தலைமை தாங்கினார். முழக்கங்கள் எழுப்பியவாறு தொடர்வண்டி நிலையம் நோக்கிப் பேரணியாகச் சென்ற காவிரி உரிமை மீட்புக் குழு சூனா செந்தில் உள்ளிட்டவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில், பேருந்து நிலையம் – அண்ணா சிலை அருகில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் முன்னெடுக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தை.செயபால் தலைமை தாங்கினார். த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் ப.சிவவடிவேலு, ஒன்றியச் செயலாளர் இரமேசு, பாமணி செயலாளர் செல்வன், தமிழக உழவர் முன்னணி கோவிந்தசாமி, வெ.வரதராசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

சோழநதி

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி வட்டத்திலுள்ள – சோழநதியில், திரௌபதி அம்மன் கோயில் அருகில் முன்னெடுக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு இரா.வினோத் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்கள் மன்னை அரிகரன், சோழநதி வினோத், நெம்மேலி மதிவாணன், பாமணி சசி உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். காத்திருப்புப் போராட்டத்தில் அமர்ந்திருந்த மக்களை வாழ்த்தி காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் குழுமியிருந்த போராட்டக் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

பெருகவாழ்ந்தான்

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி வட்டத்திலுள்ள பெருகவாழ்ந்தானில் பேருந்து நிலையம் அருகில் நடந்த போராட்டத்தை தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன் தொடங்கி வைத்தார். காவிரி உரிமை மீட்புக் குழு அமைப்பாளர்கள் சோ.சாய் கார்த்திக், கனியாகுறிச்சி வீரய்யன், சமுதாய பூபாலன், பாளைக்கோட்டை அறிவழகன் சோழப்பாண்டி பாலாஜி, இராதாநரசிங்கபுரம் ஸ்டாலின், தென்பரை பாஸ்கர், கோவிந்தநத்தம் ஞானப்பிரகாசம் உள்ளிட்ட திரளான உழவர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

சாமிமலை

கும்பகோணம் வட்டம் – சாமிமலையில், தேரடி அருகில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் மேலசெம்மங்குடி சின்னத்துரை தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் க.தீந்தமிழன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், திரளான பொது மக்களும் இதில் பங்கேற்றனர்.

சோழபுரம்

குடந்தை வட்டம் – சோழபுரத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தலைமை தாங்கினார். விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தை.சேகர், மாநில நிர்வாகிகள் பி.விஜய் ஆனந்த், தளபதி சுரேஷ், திருவாரூர் மாவட்டத் தலைவர் சித்தாடி ராஜா, குடந்தை ஒன்றிய செயலாளர் ஓவியர் முரளி, குடந்தை ஒன்றிய துணை சந்திரன், திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர் செ.தேவேந்திரன்,தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபு, குடந்தை ஒன்றியத் தலைவர் குமரன்குகடி ரமேஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

அம்மாப்பேட்டை

குடந்தை வட்டம் – அம்மாப்பேட்டையில், பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன், நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் மருதையன் ஆகியோர் தலைமை தாங்கினர். திரளான உழவர்களும், பொதுமக்களும் இதில் பங்கேற்றனர்.

பூதலூர்

தஞ்சை மாவட்டம் – பூதலூரில் நான்கு சாலை சந்திப்பு அருகில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ஐயனாவரம் சி.முருகேசன் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், மகளிர் ஆயம் தலைவர் ம.இலட்சுமி உள்ளிட்டோர் குழுமியிருந்த மக்களிடையே போராட்டக் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

செங்கிப்பட்டி

தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில், சாணூரப்பட்டி கந்தர்வக்கோட்டை சாலையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் பி.தென்னவன் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் தலைவர் ம.இலட்சுமி உள்ளிட்டோர் குழுமியிருந்த மக்களிடையே போராட்டக் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

நடுக்காவிரி

தஞ்சை மாவட்டம் – உறுவையாறு வட்டம் நடுக்காவிரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு அள்ளூர் கரிகாலன் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், மகளிர் ஆயம் துணைப் பொதுச்செயலாளர் செம்மலர் உள்ளிட்டோர் அங்கு குழுமியிருந்த உழவர்களிடையே போராட்டக் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

கள்ளப்பெரம்பூர்

தஞ்சை மாவட்டம் – கள்ளப்பெரம்பூரில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு குலோத்துங்கன் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் குழுமியிருந்த பொது மக்களிடையே போராட்டக் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

மருங்குளம்

தஞ்சை மாவட்டம் – நாஞ்சிக்கோட்டை அருகிலுள்ள மருங்குளத்தில், முதன்மைச்சாலையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு நாடக வினோத் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், மகளிர் ஆயம் துணைப் பொதுச்செயலாளர் செம்மலர் உள்ளிட்டோர் அங்கு குழுமியிருந்த உழவர்களிடையே போராட்டக் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

வலங்கைமான்

திருவாரூர் மாவட்டம் – வலங்கைமானில், காத்திருப்புப் போராட்டம் நடத்தக் காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி திருவாரூர் வடக்கு மாவட்டச் செயலாளர் புரட்சி நெப்போலியன், மாவட்டத் துணைச் செயலாளர் திருமேனி, வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் துறையரசன், நகரச்செயலாளர் விக்கி உள்ளிட்ட 26 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சமூக வலைத்தளங்களில்..

இந்திய அரசு – தமிழ் மண்ணில் ஐட்ரோகார்பன் எடுக்கக் கூடாது, காவிரி ஆணையத்தை செயலற்றதாக்கிக் காவிரியைத் தடுக்கக் கூடாது என வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட #StopHydrocarbonNotCauvery என்ற குறிச்செல்லைப் பயன்படுத்தி (Hashtag) சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கருத்துகள் பரிமாறிக் கொண்டனர்.

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப.உதயகுமார், பேரழிப்புக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் க.க.இரா.லெனின், தமிழ்ப் பேரரசுக் கட்சித் தலைவர் வ.கௌதமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், இளந்தமிழர் முன்னணிக் கழகத் தலைவர் செல்வக்குமார், “கடைசி சோறு” ஒருங்கிணைப்பாளர் பேரளம் பிரகாஷ், தமிழர் பண்பாட்டுக் கழகத் தலைவர் இராஜ்குமார், அந்தியூர் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வீ.அன்புராஜ், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ.மாரிமுத்து, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர், பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன், மகளிர் ஆயம் தலைவர் ம.இலட்சுமி அம்மாள், “மனிதி” ஒருங்கிணைப்பாளர் செல்வி, இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமிய இளைஞர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உமர்கயான், உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், எழுத்தாளர்கள் வறீதையா, நக்கீரன், ஓவியர் புகழேந்தி, ஊடகவியலாளர்கள் பா. ஏகலைவன், தமிழ் சிலம்பரசன், வீரமணி உள்ளிட்டோரும் என அனைத்துத் தரப்பினரும் இப்போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்தனர்.

StopHydrocarbonNotCauvery – குறிச்சொல் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், திடீரென அது காரணம் ஏதுமின்றி பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. இந்தியத் தலைமையமைச்சர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் “மோடியே திரும்பிப் போ!” என சமூக வலைத்தளத்தில் முழக்கமிடத் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலிருந்து இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் பல குறிச்சொற்கள் இதுபோல் காணாமல் போகியுள்ளன.

மின்னஞ்சல்களில் எச்சரிக்கை

இச்சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கம் மட்டுமின்றி, ஐட்ரோகார்பன் எடுக்க வரும் வேதாந்தா – ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பி எச்சரிக்கும் இணையப் போராட்டமும் இத்துடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் வேதாந்தா – ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு எச்சரிக்கை மடல் அனுப்பி, அதை தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தனர்.

போராட்டக் கோரிக்கையோடு ஒன்றுபட்ட தமிழ்நாடு

போராட்டத்தில் நிற்கும் காவிரிப்படுகை மக்களுடன் கை கோக்கும் வகையில், பிற மாவட்டங்களில் வாழும் மக்கள் அவரவர் இருப்பிடத்திலிருந்து கொண்டே போராட்ட முழக்கத்தை ஏந்தியவாறு சமூக வலைத்தளங்களில் பெருமளவில் படங்கள் இட்டனர். ஓசூர் அசோக் லேலணட் நிறுவனத்தின் தொழிலாளர் பாதுகாப்புப் பேரவைத் தொழிலாளர்கள், பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என எளிய மக்கள் போராட்டப் பதாகைகளோடு படங்களை சமூக வலைத்தளங்களில் பதிந்தனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், உழவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் போராட்ட முழக்கங்களை ஏந்தி நிற்கும் படங்கள், முகநூல் – ட்விட்டர் – இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் குவிந்து கொண்டிருந்தன.

இறுதியாக,

இந்திய அரசே! தமிழ் மண்ணில் ஐட்ரோகார்பன் எடுக்காதே! காவிரியைத் தடுக்காதே! என்ற நம் முழக்கம், இன்று தமிழினத்தின் முழக்கமாக மாறியுள்ளது! மேலும் முழங்குவோம்! இந்திய அரசின் சூழ்ச்சித் திட்டத்தை முறியடிப்போம்! என்று காவிரி உரிமைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Response