போராடித் தோற்ற வங்கதேசம் – இந்திய அணி நிம்மதி

உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டித்தொடரில், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூலை 2 அன்று நடந்த போட்டியில்,இந்தியா வங்கதேச அணிகள் மோதின.

டாசில் வென்ற இந்திய அணித் தலைவர் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார். குல்தீப், கேதாருக்கு பதிலாக புவனேஷ்வர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டனர்.

ரோகித், ராகுல் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, பின்னர் அதிரடியாக ரன் குவித்தது. ரோகித் 45 பந்தில் அரை சதம் அடிக்க, மறுமுனையில் ராகுல் 57 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். ரோகித் கொடுத்த ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டது வங்கதேசத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

அபாரமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 29.1 ஓவரில் 180 ரன் சேர்த்து மிக வலுவான தொடக்கத்தைக் கொடுத்தனர். நடப்பு உலகக் கோப்பையில் தனது 4 ஆவது சதத்தை பதிவு செய்த ரோகித் 104 ரன் (92 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி சர்கார் பந்துவீச்சில் தாஸ் வசம் பிடிபட்டார். ராகுல் 77 ரன் (92 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.

நம்பிக்கையுடன் விளையாடிய கோலி 26 ரன் எடுத்து முஸ்டாபிசுர் வேகத்தில் ருபெல் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

ரிஷப் பன்ட் – தோனி ஜோடி 5 ஆவது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. சைபுதின் வீசிய 40வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய பன்ட் 48 ரன் எடுத்து (41 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஷாகிப் சுழலில் வெளியேறினார்.

கடைசிக் கட்டத்தில் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் கார்த்திக் 8 ரன், தோனி 35 ரன் (33 பந்து, 4 பவுண்டரி), புவனேஷ்வர் 2, ஷமி 1 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். முஸ்டாபிசுர் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன் குவித்தது. பூம்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச பந்துவீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான் 10 ஓவரில் 1 மெய்டன் உட்பட 59 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஷாகிப், ருபெல், சர்கார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 315 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.

தமிம் இக்பால், சவும்யா சர்கார் இருவரும் துரத்தலைத் தொடங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவரில் 39 ரன் சேர்த்தது.

தமிம் 22 ரன் எடுத்து ஷமி வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து சர்கார் – ஷாகிப் இணை 2 ஆவது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்தது. சர்கார் 33 ரன் எடுத்து ஹர்திக் பந்துவீச்சில் கோலியிடம் பிடிபட்டார்.

ஷாகிப் – முஷ்பிகுர் ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்கு நம்பிக்கையுடன் விளையாடி 47 ரன் சேர்த்தது. முஷ்பிகுர் 24 ரன் எடுத்து சாஹல் சுழலில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, இந்திய வீரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

வங்கதேசம் 23 ஓவரில் 121 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஷாகிப் ஹசன் – லிட்டன் தாஸ் இணை 4 ஆவது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடியது.

இந்நிலையில் வங்கதேச அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

வங்கதேசம் இவ்வளவு ஓட்டங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, கொஞ்சம் விட்டிருந்தால் வங்கதேசம் வெற்றியைத் தொட்டிருக்கும் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் இந்திய ரசிகர்கள்.

Leave a Response