மோடி கூண்டில் ஏற்றப்படவேண்டியவர் – வே.பாரதி

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் வே.பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்……

ஜார்கண்டில் சென்ற சூன் 18 ஆம் நாள் இந்த இசுலாமிய இளைஞரைக் கட்டிவைத்து ஜெய் சிறீராம் ஜெய் ஹணுமான் என முழங்கச் சொல்லி சித்ரவதை செய்து இந்துத்துவக் கும்பல் ஒன்றால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அறிவோம்.

இது குறித்து நரேந்திர மோதி மக்களவையில் பேசும் போது…”ஜார்கண்ட் படுகொலை எனக்கு வலி தருகிறது. அதற்காக ஜார்கண்ட் மாநிலத்தையே கும்பல் படுகொலைகளின் மாநிலம் என விமர்சிப்பதை ஏற்க முடியாது. ஜார்கண்ட்டாக இருக்கட்டும் மேற்குவங்கமாக இருக்கட்டும் கேரளாவாக இருக்கட்டும் எங்கு வன்முறை நிகழ்ந்தாலும் சமமாகக் கண்டிக்க வேண்டும். எங்கு நடந்திருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்”

ஒரு நிகழ்ச்சியை அதுவும் மதத்தின் பேரால் நடந்த வன்முறை குறித்து அனைவருக்குமான தலைமை அமைச்சர் என்ன பேசியிருக்க வேண்டும். ஜெய்சிறீராம் என சொல்லச் சொல்லி படுகொலை நடந்திருப்பதை சுட்டிக்காட்டி முதலில் அதை வெளிப்படையாகக் கண்டித்திருக்க வேண்டும். இரு மதப் பிரிவினரிடையே வன்மத்தை மேலும் மேலும் வளர்க்கும் அணுகுமுறை நிறுத்தப்பட வேண்டும் என எச்சரித்திருக்க வேண்டும். கும்பல் படுகொலைகளின் மாநிலம் என்பது மிகச் சரியே. இதுவரை இப்படிப்பட்ட கொலைகள் பத்துக்கு மேல் நடந்துள்ளன. கொலைக்கு ஆளான பெரும்பாலானோர் இசுலாமியர்களே! இன்னும் இதை இந்துத்துவக் கும்பல் படுகொலைகள் நிறைந்த மாநிலம் எனச் சொல்வதே பொருத்தம். இதில் இவருக்கு வருத்தம் வேறு.

இசுலாமிய பாராளுமன்ற உறுப்பினர் அசாசுதீன் பதவியேற்க வரும்போது வம்படியாக மதவெறியோடு பாரத் மாதாகி ஜே என்று காட்டுக் கூச்சல் போட்ட தன் கட்சிக்காரர்களை கண்டிக்காத அல்லது குறைந்தபட்சம் வருந்தத்தக்கது என்ற அளவில் கூட எதுவும் பேசாத மோதியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். இதற்கும் புல்வாமா தாக்குதலின் போது பாகிஸ்தானை வெளிப்படையாக எதிர்த்து ‘தேசம்’ என்ற கண்ணோட்டத்தில் அந்த நேரத்தில் பாசக செயலை ஆதரித்தவர் அசாசுதீன்.

மேற்குவங்கம், கேரளாவெல்லாம் எங்கிருந்து வந்தது. அதுபற்றி ஏன் பேச வேண்டும். அது நடந்திருக்கும் கொடுமையை குறைத்து மதிப்பிடவும் வலி என்று சொல்லிவிட்டு அதற்கு வக்காலத்து வாங்குவதாகவுமே ஆகும். தன் கட்சிக்கு மாற்றான மாநிலங்களை குறிப்பிட்டுப் பேசுவது மோதியின் மலிவான அரசியலையே வெளிக்காட்டுகிறது. அனைவருக்குமான பொறுப்பான தலைமை அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு கட்சி அரசியல் செய்யும் மோதி எங்கிருந்தாலும் நான் ஆர்.எஸ்.எஸ்காரனே என இதன் வழி அறிவித்துக் கொள்கிறார்.

யாரானாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமாம். முதலில் கொலைகாரன் அமித்சாவை நிறுத்துங்கள். ஏன் நீங்களே கூண்டில் ஏற்றப்பட வேண்டிய கொலைகாரன்தானே!

தப்ரேஸ் அன்சாரியின் நீதிக்கு தமிழர் குரல் ஒலிக்கட்டும். வழக்கை விழிப்புடன் பின்தொடர்ந்து மதவெறிக்கு எதிராகக் காத்திரமாய்ச் செயலாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response