இங்கிலாந்தில் நடந்து வரும் 12 ஆவது உலகக்கோப்பை மட்டைப்பந்து போட்டியில், ஜூன் 27 அன்று, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ஆனால், 23 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில்,ரோகித் ஷர்மா ஆட்டமிழந்தார்.
லோகேஷ் ராகுலுக்கு இந்திய அணித் தலைவர் விராத் கோலி கை கொடுத்தார். ஆனால், 64 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில், லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார். அடுத்து விராத் கோலியுடன் கை கொடுத்த விஜய் ஷங்கர் 19 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். கேதார் ஜாதவ் களமிறங்க 10 பந்துகளில் 7 ரன் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். தொடர்ந்து கோலியுடன் அதிரடி காட்டிய எம்.எஸ்.தோனி களமிறங்கினார்.
ஆனால், விராத் கோலி 82 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். எம்.எஸ்.தோனியுடன் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா, 38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய முகமது ஷமி 2 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முடிவில் எம்.எஸ்.தோனி 61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து போட்டியின் கடைசி வரை விளையாடினார்.
முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் சார்பில் கெமார் ரோச் 3 விக்கெட்களும், அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷெல்டன் காட்ரெல் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 28 ரன்களும் எடுத்தனர்.
கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை 5 லீக் ஆட்டங்களில் 4 இல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துடன் நடக்க இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்தானதால் கிடைத்த ஒரு புள்ளியுடன் சேர்த்து 9 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா 3 ஆவது இடத்தில் உள்ளது.