பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு மத்தியில் பதவியேற்று, 15 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில், தெற்கு ரயில்வே அதிகாரிகள் இனி தமிழில் பேசக் கூடாது என்ற யதேச்சதிகாரப் போக்கை கண்டித்தும், அரசே மக்களை போராட்டத்திற்கு தூண்டி விடலாமா? தமிழக அரசு இதை திரும்பப் பெற வைக்க வேண்டும். இன்றேல் மக்களின் அறப் போராட்டக் கிளர்ச்சி வெடிக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:….
பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் இரண் டாவது முறையாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு மத்தியில் பதவியேற்று, 15 நாட்கள்கூட நிறைவடையாத நிலையில், அதன் அதிகாரிகளும், சட்ட திட்ட அறிவிப்புகளும் இந்தியாவின் அடிப்படை அரசியல் சட்டம் அளித்துள்ள உறுதிகளையும், அடிக்கட்டுமானத்தையும் தகர்ப்பதாகவே இருப்பது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்!
அரசியல் சட்டப்படி, இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு அல்லவா? (1) இறையாண்மை, (2) மதச்சார் பின்மை, (3) சம தர்மம், (4) ஜனநாயகக் குடிஅரசு என்பதற்கு வேட்டு வைக்கும் பாணியில், மாநில உரிமைக்கும் சமுகநீதிக்கும் புறம்பான கல்விக் கொள்கை, மத்திய அரசு நேரடி துணைச் செயலாளர் இணைச் செயலாளர் நியமனம், தமிழ் நாட்டவர் வேலை கிட்டாத வேதனையில் உழலும் நிலையில் பிற மாநிலத்தவர்களுக்கு கதவு திறந்து விடுதல் போன்றவை ரயில்வே போன்ற துறைகளில், தமிழ்நாடு அரசின் மின்சாரத் துறையில் வடபுலத்தவர்களை பொறியாளர் பதவியில் நிரப்புவதும் கொடுமை, கொடுமை என்று பெருங் கண்டனம் எழுந்துள்ள நிலையில்,
தமிழில் பேசக் கூடாதா?
“ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்பதுபோல இன்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் இனி ஹிந்தி, இங்கிலீஷ் மொழிகளில் மட்டும்தான் பேச வேண்டும், தமிழில் பேசக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன!
ஏற்கெனவே விருதுநகர் அருகில் உள்ள சிறு கிராம இரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்துள்ளதால், அவருக்குத் தமிழ் தெரியாததால் – இரண்டு பெரும் இரயில் விபத்து ஏற்படவிருந்தது ஊழியத் தோழர் ஒருவருடைய சமயோசித நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது.
இது தேவையில்லை. தமிழ் தெரிந்தவர்களைத் தான் தமிழ்நாட்டில் (அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மொழி தெரிந்தவர் பணி செய்தால் தான் குழப்பமும் காலதாமதமும் தவிர்க்கப் படும்) பணி புரிய வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெறும் நிலையில்,
யதேச்சதிகாரப் போக்கு அல்லவா?
இப்படி தெற்கு ரயில்வே அதி காரிகள் இனி தமிழில் பேசக் கூடாது. ஹிந்தி அல்லது இங்கிலீஷில்தான் உரையாட வேண்டும் என்பது யதேச்சதிகாரப் போக்கு அல்லவா?
எட்டாம் அட்டவணையில் 22 மொழிகளில் ஒன்று தமிழ் என்பதைவிட உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்களால் எழுதப்பட்டும் பேசப்பட்டும், மேலும் சில நாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ள செம்மொழி தமிழுக்குத் தமிழ் நாட்டில் தடையா?
நம் ரத்தம் கொதிக்கிறது!
அரசே மக்களை போராட்டத்திற்கு தூண்டி விடலாமா?
தமிழக அரசும் அனைத்துக் கட்சிகளும் உடனடியாக கண்டனம் தெரிவித்து, அடுத்து இதை திரும்பப் பெற வைக்க வேண்டும். இன்றேல் மக்களின் அறப் போராட்டக் கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி! மக்களின் அன்றாட வாழ்க்கையில் இப்படி விளையாடக் கூடாது மத்திய அரசு.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.