களத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டுவருகிறது.இதனால் பாஜக மீது பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதையொட்டி பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மே 17 ஆம் தேதி தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட இயக்கத்துறை மேலாளர் சிவா, சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நிலைய அதிகாரிகள் மற்றும் பிரிவு கட்டுப்பாட்டாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை பிறப்பித்தார்.

அதில் கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கும், நிலைய அதிகாரிகளுக்கும் இடையே ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்றும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்குப் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், சுற்றறிக்கையை இரத்து செய்ய வேண்டும், தமிழ் மொழியில் ரெயில் நிலைய அதிகாரிகள் பேசுவதைத் தொடர வேண்டும் என்றும் கோரி தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினை தி.மு.க. எம்.பி., தயாநிதி மாறன் நேற்று சந்தித்து மனு கொடுத்தார்.

அப்போது தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ரவிசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அவர்களுடன் ரெயில்வே பொதுமேலாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்திருந்த ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

தயாநிதி மாறன் எம்.பி.யின் கோரிக்கை மனுவைப் பெற்ற தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின், அவரிடம் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள உத்தரவு உடனே இரத்து செய்யப்படும் என உறுதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த மே 17- ஆம் தேதி ஆங்கிலம், இந்தி மட்டுமே பேச வேண்டும் என தலைமை போக்குவரத்துத் திட்ட மேலாளர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். தற்போது ஒவ்வொரு கோட்டத்துக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் மறைமுகமாக இந்தி திணிக்க முயற்சி நடக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொது மேலாளரைச் சந்தித்து ஒரு நல்ல முடிவைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்காதீர்கள்; மீண்டும் பழைய முறையை அமலுக்குக் கொண்டு வாருங்கள் என மனு அளித்து வலியுறுத்தினோம். இந்தக் கோரிக்கையை ஏற்று உடனடியாக ஆங்கிலம், இந்தி மட்டும் பேசவேண்டும் என்ற அந்த சுற்றறிக்கையை இரத்து செய்கிறோம் என உறுதி அளித்தார். மேலும் மீண்டும் பழைய முறைப்படி பிராந்திய மொழி பயன்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கையை ஏற்று, ரெயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது, இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை ரெயில்வே நிர்வாகம் இரத்துசெய்து விட்டது.

Leave a Response