ஆபரேசன் தாமரைக்கு பதிலடி – பாஜக பீதி

கர்நாடகத்தில் காங்கிரசு -ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி முதலமைச்சராக உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஆபரேஷன் தாமரையை பா.ஜனதா கையில் எடுத்தது.அதன்படி சில சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்து, அதன் மூலம் கூட்டணி அரசைக் கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்தது.

சில முறை நடந்த இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதற்குள் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. இதில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 22 தொகுதிகளுக்கு மேல் பா.ஜனதா வென்றால், கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜனதா அரசு அமையும் என்று அக்கட்சி தலைவர்கள் கூறினர்.

இந்த நிலையில் கூட்டணி அரசைக் கவிழ்க்கும் முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருகிறது. பா.ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் பணியில் முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரசுத் தலைவர்கள் இறங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பா.ஜனதாவைச் சேர்ந்த பசவராஜ் தன்டேசுகர் முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்துப் பேசி இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கொப்பல் மாவட்டம் கனககிரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

குமாரசாமியை பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் சந்தித்துப் பேசியது, பா.ஜனதாவில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது. அவருடன் அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் குமாரசாமியின் தொடர்பில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பா.ஜனதா தலைவர்கள் பீதியடைந்து உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response