சீமான் கமல் வாங்கிய வாக்குகளும் இனி செய்யவேண்டியதும்

பச்சைத்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் நடந்து முடிந்த தேர்தலில் சீமான், கமல் ஆகியோர் வாங்கிய வாக்குகள் குறித்து எழுதியிருக்கும் கருத்து……

நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏறத்தாழ நான்கு விழுக்காடு வாக்குகள் பெற்றிருக்கும் ‘நாம் தமிழர்’ கட்சிக்கு அன்பார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

தமிழகமெங்கும் சுற்றிச்சுழன்று, தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் உள்வாங்கி, அவை குறித்தத் தெளிவான நிலைப்பாடுகள் எடுத்து, எண்ணிறந்த மேடைகளிலும், ஊடகங்களிலும் வாய் வலிக்கப் பேசி, ஏராளமான இளைஞர்களைத் தன்வயப்படுத்தி, எண்ணற்றோரின் ஏளனத்தையும், எதிர்ப்பையும் மீறி தோழர் சீமான் அவர்களும், அவரது தம்பியரும் இந்தச் சாதனையை செய்திருக்கின்றனர்.

இதில் எதையுமே செய்யாமல் நடிகர் கமலஹாசனும் அவரது ரசிகர்களும் அதே நான்கு விழுக்காடு வாக்குகள் பெறுவது வேதனை அளிக்கிறது. சென்னை (வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருப்பெரும்புதூர், திருவள்ளூர்) மற்றும் கொங்கு மண்டலம் (கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், பொள்ளாச்சி) எனும் இரண்டு பகுதிகளில் கமல் கட்சி அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறது. இந்த மக்கள் கமலிடம் அப்படி எதைக் கண்டார்கள்?

பட்டதெல்லாம் போதாதா? சினிமாக்காரர்களை விட்டு விலகி வாருங்கள், தமிழர்களே! சினிமாவை ஒரு கலையாக, ஒரு தொழிலாக என்றென்றும் ஆதரிப்போம், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சினிமா தரும் புகழை, பணத்தை, ஆதரவை (எளிதில் பெறும்) அதிகாரமாக மாற்ற முனைவோரை உறுதிபட எதிர்ப்போம். தோழர் சீமான் விடயத்திலும், அவர் மீண்டும் சினிமாவுக்குப் போனாலோ, அல்லது மக்களை சினிமாக் கலாச்சாரத்துக்கு இழுத்துச் சென்றாலோ, அவரையும் கடுமையாக எதிர்ப்போம்.

ஓராண்டு கால கமல் கட்சியின் எளிதான நான்கு விழுக்காடு வாக்குகளைப் பார்த்துவிட்டு, அவரைவிட புகழ்பெற்ற நடிகர் பட்டாளம் கோட்டை நோக்கிப் படையெடுத்து வரக்கூடாதே என்றிருக்கிறது.

‘நாம் தமிழர்’ கடுமையாக உழைத்து, படிப்படியாகப் பெற்றிருக்கும் இந்த வளர்ச்சியின் முன்னால் கமலின் நீர்க்குமிழி வெற்றி நிலைத்து நிற்காது. தோழர் சீமானும், அவரது தம்பியரும்கூட இந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள, அதை மேலும் வளர்த்தெடுக்க தங்கள் பேச்சு, எழுத்து, செயல்பாடுகள், சிந்தனைகள், குணநலன்கள் போன்ற எல்லாத் தளங்களிலும் பற்பல மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response