அதிமுகவின் முடிவு திமுகவுக்கு சாதகம் – பரபர அரசியல் கணக்கு

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் மீது சட்டப்பேரவைத் தலைவரிடம் அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன் நேற்று (ஏப்ரல் 28) புகார் அளித்தார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் பேரவைத்தலைவர் ப.தனபாலை நேற்று காலையில் சந்தித்துப் பேசிய அவர், அப்போது இந்தப் புகார் மனுவை சபாநாயகரிடம் வழங்கினார்.

பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில்…

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ. வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும், கட்சியைப் பாதிக்கும் வகையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

எனவே, அந்த 3 எம்.எல்.ஏ.க்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சபாநாயகரிடம் புகார் மனு அளித்துள்ளேன். அவர்கள் 3 பேரும் அ.தி.மு.க. கட்சி விரோத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள் என்பது தொடர்பாக ஆவணங்களையும், ஆதாரங்களையும் சபாநாயகரிடம் அளித்திருக்கிறேன். கடந்த ஆண்டும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் புகார் அளித்திருந்தேன்.

இப்போது கூடுதலாகக் கிடைத்த ஆதாரங்களின்படி மீண்டும் புகார் அளித்திருக்கிறேன். வீடியோ ஆதாரம் இல்லை. புகைப்பட ஆதாரங்கள்தான் உள்ளன. மேலும் பல ஆதாரங்களும் உள்ளன. டி.டி.வி. தினகரன் கட்சியில் அவர்கள் 3 பேரும் பொறுப்பில் இருக்கின்றனர். அவர்கள் 3 பேர் மீதுதான் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அந்த 3 பேர் மீதும் சட்டப்பூர்வமான உரிய நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்வார்.

அவர்கள் நீண்ட நாட்கள் டி.டி.வி.தினகரனின் ஆதாரவாளராக இருந்தாலும் தற்போதுதான் ஆதாரங்கள் கிடைத்தன. தேர்தல் தோல்வி பயத்தினால் இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளவில்லை. அ.தி.மு.க.தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கம் கேட்க ப.தனபால் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு நோட்டீசு அளித்து விளக்கம் கேட்கப்படும்.

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதன் காரணமாகத்தான் அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அதுபோன்ற நடவடிக்கைக்கான பணிகள் ஆரம்பித்துள்ளன. இதனால் 3 பேரின் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஆபத்து ஏற்படும்.

ஒரு கட்சியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.யாக வெற்றி பெற்ற பிறகு அந்த நபர் வேறு கட்சிக்கு மாறினாலோ அல்லது ஆதரவாக செயல்பட்டாலோ, அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான காரணமாக அதை எடுத்துக்கொள்ளலாம் என்று இந்திய அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் பத்தாவது இணைப்புப் பட்டியலின் 8-வது பத்தியின்படி, கட்சி மாறும் உறுப்பினர்களின் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதே விதியின் அடிப்படையில்தான் எம்.எல்.ஏ.க்கள் அ.பிரபு, வி.டி.கலைச்செல்வன், ரத்தினசபாபதி மீது புகார் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில், 3 எம்.எல்.ஏ.க்கள் மீதான அரசு தலைமை கொறடாவின் இந்த புகார் மாநில அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர், மே 23-ந் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, சபாநாயகர் அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர் மீது தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக கண்டனம் தெரிவித்தாலும் இந்த நடவடிக்கை திமுகவுக்கு சாதகமாகவே முடியும் என்கிறார்கள்.

தமிழக சட்டசபையில் கட்சிகளின் பலம்

அ.தி.மு.க.- 113

தி.மு.க.- 88

காங்கிரஸ்- 8

இந்திய யூனியன்

முஸ்லிம் லீக் – 1

சுயேச்சை- 1

சபாநாயகர்- 1

காலியிடம் – 22

மொத்தம்- 234

திமுக அணி வசம் தற்போது 97 எம்எல்ஏக்கள்
உள்ள நிலையில், 22 இடங்களுக்கான இடைத்தேர்தலில்
20 இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சி மாற்றம் நடக்கும்.

தற்போது மூன்று பேரை சபாநாயகர்
நீக்குவாரேயானால் 19 இடங்களில் திமுக வெற்றி்பெற்றாலே ஆட்சி மாறும்.

ஆக அதிமுகவின் இந்த முடிவு திமுகவுக்கே சாதகமாக அமையும் என்கிறார்கள்.

Leave a Response