தோனி இல்லையென்றால் இப்படியா? – சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் 12 தொடரின் 44 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 26 இரவு 8 மணிக்குத் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணித் தலைவர் சுரெஷ் ரெய்னா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர் அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது டி காக் 15 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய எவின் லெவிஸ் 32 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 48 பந்தில் 3 சிக்சர் 6 பவுண்டரியுடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா 23 ரன்னுடனும் பொல்லார்டு 13 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. முரளி விஜய், வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார். முதல் ஓவரிலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த வாட்சன் 8 ரன்னில் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா பந்தில் ரெய்னா 2 ரன்களிலும் அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்காமலும் குருணால் பாண்டியா பந்திலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் முரளி விஜய் நிலைத்து நிற்க மறுபக்கம் விக்கெட் வீழந்த வண்ணமே இருந்தது. கேதர் ஜாதவ் 6 ரன்னிலும் ஷொரே 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து விளையாடிய முரளி விஜய் 38 ரன்னில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே 11.4 ஓவரில் 66 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 6 விக்கெட்டுக்களை இழந்தது.

7 ஆவது விக்கெட்டுக்கு பிராவோ உடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 99 ரன்கள் இருந்த போது மலிங்கா பந்து வீச்சில் பிராவோ வெளியேற அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 109 ரன்களில் ஆல் அவுட் ஆகி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதனால் சென்னை அணி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தோனி நேற்றைய ஆட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர் இருந்திருந்தால் இவ்வளவு மோசமான தோல்வி ஏற்பட்டிருக்காது என்று சென்னை அணி ரசிகர்கள் கூறுகின்றனர்.

Leave a Response