தேர்தல் நாளில் செய்யவேண்டியவை – கட்சியினருக்கு சீமான் உத்தரவு

ஏப்ரல் 18 வாக்குப்பதிவு நாளையொட்டி சீமான், தம் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்….

என் உயிருக்கு இனிப்பான நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கும் , என் உணர்வோடும் ,உயிரோடும் கலந்து விட்ட தாய்த் தமிழ் உறவுகளுக்கும்.. வணக்கம்.

ஏப்ரல் 18 இல் நடைபெறவிருக்கின்ற இந்திய மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கின்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றின் பணிகளுக்காக நீங்கள் ஒவ்வொருவரும் உழைத்த உழைப்பு என்பது தமிழ் இன விடுதலைப் பக்கங்களில் மதிப்புமிக்க சொற்களால் விவரிக்கப் படவேண்டிய வியர்வை வரலாறு.

எவ்விதமான பொருளாதார சாதிய பின்புலமுமின்றி .. இலட்சிய நெருப்பினை.. தன் ஆன்மாவில் சுமந்து, இனத்தின் வலி அறிந்து, நீண்டகாலமாக அடிமைப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் துயர் இருட்டைப் போக்க வெயில் கொளுத்தும் வீதிகளில்.. வியர்வை மழையில் நனைந்து.. சரியான உணவு, தேவையான ஓய்வு என எதுவும் எடுக்காமல்.. கட்சி அறிவித்த வேட்பாளரையும்.. இறுதி நேரத்தில் கிடைத்த சின்னத்தையும் கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையினை மிக நேர்த்தியாக செய்திருக்கிற உங்கள் ஒவ்வொருவரையும் என் உள்ளன்போடு இதயம் நெகிழ வாழ்த்துகிறேன்.
பாராட்டுகிறேன்.

அன்பு உறவுகளே..

மக்களை, இந்த மண்ணைச் சுரண்டிக் கொழுத்து..அரசியல் என்பதை பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றி.. கோடிகளில் புரண்டு.. கொள்ளைக்காரர்களாக எழுந்து நிற்கிற அரசியல்வாதிகளுக்கு மத்தியில்..

நம் இன மானம் காக்க, சொந்த வருமானத்தையும் இழந்து.. சுயநலத்தை அழித்து நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தி இருக்கிற வேர்வைத் துளிகள் எதிர்காலத் தலைமுறை செழித்து வளர சிந்தி இருக்கின்ற உதிரத் துளிகள் என்பதை நான் நெஞ்சம் நெகிழ உணர்கிறேன்.

நாம் பயணிக்கும் பாதை என்பது ஏற்கனவே ஒருவர் பயணித்து அந்தப் பாதையிலேயே இடையூறாக விளைந்து இருக்கிற முட்களை, கற்களை நீக்கி வைத்து இலகுவாக பயணிக்க வைக்கிற இன்பப் பாதை அல்ல. மாறாக இந்த இன விடுதலைக்காக பாதையைத் தேடாதே உருவாக்கு என்கின்ற நம் தேசியத் தலைவரின் சொற்களுக்கு ஏற்ப தடைகளையெல்லாம் தாண்டி..தென்படும் இடையூறுகளை எல்லாம் தகர்த்து நமக்கு நாமே உருவாக்கிக் கொள்கிற புரட்சிப் பாதை.

நம் கண்முன்னால் விரிந்திருக்கிற இந்தத் தேர்தல் களம் என்பது ஒரு மாபெரும் யுத்தக்களமாகவே நாம் உணர்ந்தோம். அசைக்க முடியா மன உறுதி, இடிக்க முடியா இலட்சிய ஆற்றல், தகர்க்க முடியா தன்னம்பிக்கை இவைகளையே ஆயுதமாகக் கொண்டு இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்கிற உயரிய நோக்கத்திற்காக நாம் அணிவகுத்து நிற்கிறோம். மற்றவர்களைப் போல அடுத்தவர்களி்ன் குறைகளில் நமக்கான அரசியலை நாம் நிறுவ விரும்பவில்லை . மாறாக ஈடு இணையற்ற மக்கள் நலன் சார்ந்த நமது செயல்களின் நிலைகளிலேயே நமக்கான அரசியல் உருவாகி நிற்கிறது .

கடந்த நாட்களில் நாம் உழைத்த உழைப்பிற்கான முழுமை இன்றைய தினம் நிகழ இருக்கிறது. இத்தனை நாட்களும் கடும் உழைப்பினை தந்த நமது உறவுகள் இன்றைய தினத்தினை அலட்சியமாக கடந்துவிடக் கூடாது.

ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடியில் நாம் தமிழரின் இளைஞர்கள் முகவர்களாக முகம் முழுக்க மாசற்ற நம்பிக்கையோடு , நேர்மை திறத்தோடு அமர வேண்டும். இந்தத் தேர்தல் முறைமையை திறம்பட கையாளுகிற திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.

இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி எமது உறவுகள் முகவர்களாக அமர்ந்து வாக்கு செலுத்த வரும் நம் தாய்த் தமிழ் உறவுகள் அனைவரிடத்திலும் நாம் தமிழர் குறித்த மகத்தான நம்பிக்கையை உருவாக்க வேண்டும். தேர்தல் நாளில் முழுக்க நம் உறவுகள் வாக்குச்சாவடிப் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டுமென பேரன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நிலத்தில் விதைக்கப்படும் எந்த உழைப்பும் வீணாகாது. உன்னதமான உங்களது உழைப்பு சிகரம் ஏறாமல் சிதையாது. வெற்றியின் உச்சியைத் தீண்டாமல் நமது வாழ்க்கை முடியாது.

உங்கள் அனைவருக்கும் எனது பேரன்பு நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Leave a Response