95 நாடாளுமன்ற 53 சட்டமன்றத் தொகுதிகளில் 2 ஆம் கட்டத் தேர்தல் இன்று

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது.ஏப்ரல் 11 ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது..

ஏப்ரல் 18 ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) 2 ஆவது கட்டத் தேர்தல் நடக்கிறது.

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 97 தொகுதிகளில் இந்தத் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் வேலூர் தொகுதி தேர்தல், பணப் பட்டுவாடா புகாரின்பேரில் இரத்து செய்யப்பட்டிருக்கிறது.

திரிபுரா மாநிலத்தில் திரிபுரா (கிழக்கு) தொகுதியில் சட்டம், ஒழுங்கைக் காரணம் காட்டி தேர்தல், 3 ஆவது கட்டத்துக்கு (ஏப்ரல் 23 ஆம் தேதி) ஒத்தி போடப்பட்டுள்ளது.

எனவே இன்று 12 மாநிலங்களில் 95 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் 38, புதுச்சேரியில் 1, கர்நாடகத்தில் 14, மராட்டியத்தில் 10, உத்தரபிரதேசத்தில் 8, அசாம், பீகார், ஒடிசாவில் தலா 5, சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 18 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தலும், ஒடிசா சட்டசபைத் தேர்தலில் 2 ஆம் கட்டமாக 35 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.

இந்த நாடாளுமன்ற 2 ஆவது கட்டத் தேர்தலில், முன்னாள் பிரதமர் தேவகவுடா (தும்கூர்- மதசார்பற்ற ஜனதாதளம்), காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா (ஸ்ரீநகர்-தேசிய மாநாட்டுக் கட்சி), மத்திய மந்திரிகள் ஜூவல் ஓரம் (சுந்தர்கார்-பா.ஜனதா), சதானந்த கவுடா (பெங்களூரு வடக்கு- பா.ஜனதா), பொன் ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி-பா.ஜனதா), நடிகை ஹேமமாலினி (மதுரா-பா.ஜனதா), நடிகர் ராஜ்பப்பர் (பதேப்பூர் சிக்ரி-காங்கிரஸ்), முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே (சோலாப்பூர்-காங்கிரஸ்) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் (ஹிஞ்சிலி- பிஜூஜனதாதளம்) இன்று தேர்தலைச் சந்திக்கிற தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இன்று நடக்கிற தேர்தலில் சுமார் 1,600 வேட்பாளர்களின் தலையெழுத்தை ஏறத்தாழ 15 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தீர்மானிக்கின்றனர்.

இவர்கள் வாக்கு அளிப்பதற்காக சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் சித்திரை திருவிழாவையொட்டி வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நீடிக்கிறது.

மற்ற எல்லா மாநிலங்களிலும் தமிழ்நாட்டைப்போலவே 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கினாலும், முடிகிற நேரம் மாறுபடுகிறது. அசாமில் மாலை 5 மணிக்கும், பீகாரில் 6 மணிக்கும், சத்தீஷ்காரில் சில இடங்களில் 3 மணிக்கும், சில இடங்களில் 5 மணிக்கும், காஷ்மீரில் 6 மணிக்கும், கர்நாடகத்தில் 6 மணிக்கும், மராட்டியத்தில் 6 மணிக்கும், மணிப்பூரில் 4 மணிக்கும், ஒடிசாவில் சில இடங்களில் 4 மணிக்கும், பல இடங்களில் 6 மணிக்கும், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகியவற்றில் 6 மணிக்கும் முடிகிறது.

இந்த முறை மின்னணு வாக்கு எந்திரங்களுடன் ‘விவிபாட்’ என்னும் வாக்கை உறுதி செய்கிற கருவியும் பொருத்தப்படுவதால், ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்கு உரிய சின்னத்தில் பதிவாகி உள்ளதா என்பதை அதில் பார்த்து உறுதி செய்து கொள்ள முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Response