தீப்பிடித்து எரிந்த புராதன கத்தோலிக்க தேவாலயம்

எதிர்பாராத தீ விபத்து முற்றிலும் சேதமடைந்துள்ள பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள கத்தோலிக்க தேவாலயம்.

Incendie à Notre-Dame. PARIS
மிகவும் வேதனையான சம்பவம்
உலகின் புகழ்பெற்ற பாரிஸ் நகரின் தனித்துவம் மிக்க அடையாளங்களில் ஒன்றான புராதன கத்தோலிக்க தேவாலயத்தின்(Notre-Dame de Paris) பெரும் பகுதிகளை தீ விழுங்கிக்கொண்டிருக்கிறது.

856 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அருங் கலைப் பொக்கிஷம் முழுமையாக தீயில் அழிவதைத் தடுக்க பெருமெடுப்பிலான தீயணைப்புப்பணி முழு வீச்சில் நீடிக்கின்றது.

தேவாலயத்தில் கடந்த சில நாட்களாக மறுசீரமைப்பு (புனரமைப்பு)வேலைகள் நடைபெற்று வந்த சூழ்நிலையில் ஏப்ரல் 15 இரவு பாரிஸ் நேரப்படிஏழு மணியளவில் அங்கு தீ மூண்டிருக்கிறது. 13, மற்றும் 19 ஆம் நூற்றாண்டு கால கட்டட வேலைப்பாடுகள் அமைந்த பகுதியை தீ நாசமாக்கி உள்ளது. ஆலயத்தின் அழகிய முகடுகளில் தீ கொளுந்துவிட்டெரியும் காட்சிகள் உலகெங்கும் ஒளிபரப்பாகியுள்ளன.

பிரதமர், அமைச்சர்கள், எலிஸே மாளிகை அதிகாரிகள் சகிதம் அதிபர் மக்ரோன் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார்.

நாட்டில் உருவாகியிருக்கும் மக்கள் போராட்டங்களை ஒட்டி அதிபர் மக்ரோன் மக்களுக்கு ஆற்றவிருந்த தொலைக்காட்சி உரை இந்த தீ அனர்த்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ஈஸ்டர் காலத்தில் கத்தோலிக்கர்களை மட்டுமன்றி நாடு முழுவதும் சகல மக்களையும் உணர்வு ரீதியில் பெரிதும் பாதித்திருக்கிறது இந்தத் தீ அனர்த்தம்.

(வரலாறு)

பாரிஸ் நகரத்தில் இருந்த வரலாற்றுப் புகழ்மிக்க நொத்தர் டாம் (Notre-Dame-de-பாரிஸ்) போராலயம் தீக்கிரையான சம்பவம் பிரான்சின் வரலாற்றில் முக்கியமாக துன்பியல் நிகழ்வாக பதியப்படும்.

பிரெஞ்சு குடியரசு தனது வரலாற்றுச் சின்னங்களை அதிக கவனத்துடன் பராமரித்து வந்த போதிலும் இன்று இந்த பேராலயத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

856 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்தப் பேராலயம் கி.பி 1760 வரை மன்னர்களின் அனுசரணையுடன் அரசியலிலும் பிரெஞ்சு மக்களது வாழ்வியல் தளத்திலும் செல்வாக்கு செலுத்தும் ஒரு அமைப்பாக இருந்து வந்தது.

பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் குறிப்பாக கி.பி 1793 அளவில் மதத்தை அரசிய லில் இருந்து வேறுபடுத்தி வைக்கும் நடைமுறை ஆரம்பித்தபோது இந்தப் பேராலயம் அரசு மீதும் மக்கள் மீதும் ஆளுமையைச் செலுத்தும் தனது பிடிமானத்தை இழந்தது.
பிரெஞ்சு புரட்சிக்காலகட்டத்தில் இந்த பேராலயத்தின் பெரும் பகுதி புரட்சியாளர்களின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. அத்துடன் அந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற மோதல்களில் இந்தப் பேராலயத்தின் பல பகுதிகள் சிதைவடைந்தன.புரட்சிக்குப் பின்வந்த அரசு இந்தப் பேராலயத்தைப் புதுப்பிப்பதற்கும் அதன் இருப்பையும் அதிகாரத்தையும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கும் விரும்பவில்லை.

கி.பி. 1801 ல் நெப்போலியன் பொனபாட் ஆட்சிக்கு வந்த பின்பு இந்தப் பேராலயத்தைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு வேலைகளும் நடந்தன.

ஆனால் நெப்போலியனின் மறைவுக்குப் பின்பு இந்தப் பேராலயம் மீண்டும் அரசின் ஆதரவை இழந்தது.
பிரான்சில் புகழ்பெற்ற எழுத்தாளரான விக்டர் ஹூகோ கி.பி.1831 ம் ஆண்டு இந்தப் பேராலயத்தின் அவலநிலை பற்றி ஆதரங்களுடன் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார்.

அதை தொடர்ந்து செல்வந்தர்களினது மக்களினதும் நிதிபங்களிப்புடன் இந்த பேராலயத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன.
அதன் பின் பின் முதலாம் இரண்டாம் உலக யுத்த காலத்தில் இந்த பேராலயம் மீண்டும் அதிக பேரழிவுகளைச் சந்தித்து.

1944 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாசி ஆக்கிரமிப்பிலிருந்து பிரான்ஸ் விடுதலையான பின்பு ஆட்சிக்கு வந்த ஜெனரல் சாள்ஸ் து ஹோல் இந்த பேராலயத்தைப் புனரமைப்பதற்கு முன்வந்தார்.26.08.1944 அன்று பிரெஞ்சு குடியரசின் விடுதலையைக் கொண்டாடும் முகமாக மிகப்பெரிய ஆராதனை நிகழ்வொன்றை இந்தப் பேராலயத்தில் நிகழ்த்தினார்.

இன்றைய நவீன பிரெஞ்சு குடியரசில் இந்தப் பேராலயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொக்கிசமாகப் பார்க்கப்பட்டது.அதனுடைய மதப் பாரம்பரியம் வழிபாட்டு சுதந்திரம் என்பன அங்கீகரிக்கப்பட்டாலும் மன்னர் காலத்தைப் போல அரசியலிலும் மக்களது வாழ்வியலிலும் அதிகாரம் செலுத்தும் இந்த பேராலயத்துக்கு வழங்கப்படவில்லை.

வரலாற்று பொக்கிசத்தை பேணிப்பாதுகாப்பது என்ற அடிப்படையில் இந்த பேராலயத்தின் கட்டிட புனரமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து இந்தப் பேராலயத்தைப் பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை தன்னகத்தே கொண்ட இந்த பேராலயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி பகலவன், சிறு வரலாற்று பதிவு
ஈழம் வாகீசன்

Leave a Response