நடிகைக்கு இலஞ்சம் கொடுத்த அனில் அம்பானி – மீண்டும் வெடித்த ரஃபேல் ஊழல்

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரசுக் கட்சி தொடக்கம் முதலே புகார் கூறி வருகிறது.

இந்த நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பிரான்சிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டு கிளம்பி இருந்தது. தற்போது இந்த புகார்கள் தொடர்பான விசாரணைக்காக நீதிபதி ஒருவரை பிரான்ஸ் அரசு நியமித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரசுக் கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காங்கிரசுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது தற்போது தெளிவாகி இருக்கிறது. இது தொடர்பான விசாரணைக்கு பிரெஞ்சு அரசு உத்தரவிட்டதன் மூலம் காங்கிரசு மற்றும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

இது தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய அடையாளத்துடன் தொடர்புடையது என்பதால், ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைதான் இதற்கு ஒரே வழி என்று கூறிய சுர்ஜேவாலா, இதில் உச்சநீதிமன்ற விசாரணை தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இதுமட்டுமின்றி, ரபேல் விமான கொள்முதல் ஊழல் தொடர்பாக பிரான்சில் தனி நீதிபதி விசாரணையைத் தொடங்கி இருப்பதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் பெரிதாகியுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை டசால்ட் நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராக மாற்றி, ஆதாயம் பெற வைத்ததன் பின்னணியில் இருந்த அரசியல் அழுத்தங்கள் குறித்த தகவல்களை, பிரான்ஸ் புலனாய்வு இணைய இதழான மீடியா பார்ட் ஆதாரங்களுடன் தொடர்ந்து வெளியிட்டதே இதற்குக் காரணம்.

இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு….

காங்கிரசு ஆட்சிக் காலத்தில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அதனை கைவிட்டு 36 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான புதிய அறிவிப்பை 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிட்டார்.

மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகும் 15 நாட்களுக்கு முன்னர், அதாவது 2015 மார்ச் 26-ஆம் தேதி, ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், தனது இந்திய தொழில்நுட்பப் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்து முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டு இருப்பதாக பிரான்சின் மீடியா பார்ட் இணைய ஊடகம் கூறியுள்ளது.

இதற்கான ஆவணங்களை வெளியிட்டுள்ள மீடியா பார்ட், பிரதமர் மோடியின் அறிவிப்பு அப்போதைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கே தெரியாது என்று கூறப்படும் நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அனில் அம்பானி நிறுவனத்தைடசால்ட் நிறுவனத்தோடு இணைத்ததன் மூலம், காங்கிரசு ஆட்சியின்போது இந்தியாவில் ரஃபேல் விமானங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்த பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்ஸ் கழற்றிவிடப்பட்டதாகவும் மீடியாபார்ட் குறிப்பிட்டுள்ளது.

2017 இல் டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து, டி.ஆர்.ஏ.எல். எனப்படும் டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கி புதிய ஒப்பந்தம் செய்தன.

முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கட்டாயத்தின்பேரில் ரிலையன்சுடன் டசால்ட் இந்த ஒப்பந்தத்தையும் செய்ததாகக் கூறியுள்ள மீடியா பார்ட், உண்மையில், டசால்ட் நிறுவனம் அனில் அம்பானி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் பெரும் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பது அந்நிறுவன ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

டி.ஆர்.ஏ.எல் முதலீடு மற்றும் பங்குகள் குறித்த உடன்படிக்கை விவரங்களை வெளியிட்டு அதிர்ச்சிகரமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது மீடியாபார்ட். அதாவது, மொத்தம் 169 மில்லியன் யூரோ முதலீட்டில் 159 மில்லியன் யூரோவை கொடுக்கும் டசால்ட் 49 சதவீதப் பங்குகளை வைத்திருக்கும்.

அதேவேளையில் 10 மில்லியன் யூரோவை மட்டும் முதலீடு செய்யும் ரிலைய்ன்ஸ் நிறுவனத்திற்கு 51 சதவீத பங்குகள் என்று டி.ஆர்.ஏ.எல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் மீடியா பார்ட் வெளியிட்டுள்ளது. வலுவான அரசியல் பலத்தால் ரிலையன்சுக்கு இப்படி ஒரு ஒப்பந்தம் சாத்தியமானதாக மீடியாபார்ட் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை, ரஃபேல் ஒப்பந்தத்தில் சேர்த்ததாகவும், தங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், பிரான்ஸ் அதிபராக இருந்த ஹாலேந்தே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள மீடியாபார்ட், முன்னதாக 2016 ஆம் ஆண்டு ஹாலந்தேவுக்கு நெருக்கமான, பிரான்ஸ் நடிகை ஜூலிகயத்திற்கு, ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஒரு இலட்சத்து 60 மில்லியன் யூரோ நிதி வழங்கியிருப்பதை ஆதாங்களுடன் வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள மீடியா பார்ட் ஊடகத்தின் தொடர் செய்திகள், இந்திய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response