மிச்செல் அடித்த சிக்ஸர் – சென்னை அணி அபாரம்

8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் மட்டைப்பந்தாட்டப் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 11 இரவு நடந்த 25 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் ரஹானே, ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் ஜோஸ் பட்லர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரும், 2-வது ஓவரில் ரஹானே தொடர்ந்து 2 பவுண்டரியும் விளாசி அமர்க்களமாக ஆட்டத்தை தொடங்கினார்கள்.

3 ஆவது ஓவரில் தீபக் சாஹர் பந்து வீச்சில் ரஹானேவுக்கு (14 ரன், 11 பந்து, 3 பவுண்டரி) எதிராக எல்.பி.டபிள்யூ. கேட்டு அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததை தொடர்ந்து சென்னை அணியின் தலைவர் தோனி டி.ஆர்.எஸ். முறையில் நடுவரின் முடிவுக்கு எதிராக முறையீடு செய்தார். இதனை ஆய்வு செய்த 3-வது நடுவர் ரஹானே அவுட் என்று அறிவித்தார். அடுத்து களம் கண்ட சஞ்சு சாம்சன் தான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார்.

4 ஆவது ஓவரில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய ஜோஸ் பட்லர் (23 ரன், 10 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவரது அடுத்த பந்தில் அம்பத்தி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து ஸ்டீவன் சுமித் களம் கண்டார். 4.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 50 ரன்னை கடந்தது. 6-வது ஓவரில் சஞ்சு சாம்சன் (6 ரன்) மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் துருவ் ஷோரேவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.

அடுத்து வந்த ராகுல் திரிபாதி (10 ரன்) மற்றும் ஸ்டீவன் சுமித் (15 ரன்) ரவீந்திர ஜடேஜாவின் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல். போட்டியில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 13-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதைத்தொடர்ந்து ரியான் பராக், பென் ஸ்டோக்சுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் தவறான பந்துகளை தண்டிக்கும் வகையில் அடித்தும் ஆடினார்கள். 14.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை தொட்டது.

அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 103 ரன்னாக இருந்த போது ரியான் பராக் (16 ரன், 14 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் (28 ரன், 26 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) தீபக் சாஹர் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

இதனை அடுத்து ஸ்ரேயாஸ் கோபால், ஜோப்ரா ஆர்ச்சருடன் இணைந்தார். கடைசி ஓவரில் இருவரும் 18 ரன்கள் சேர்த்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்களான ஷேன் வாட்சன், டு பிளிஸ்சிஸ் சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய தோனி, அம்பதி ராயுடு ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. அபாரமாக ஆடிய அம்பதி ராயுடு 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நிதானமாக ஆடிய அணித்தலைவர் தோனி 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிச்செல் சாண்ட்னர் சிக்சர் அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தார். இந்த வெற்றியை அடுத்து சென்னை அணி 12 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Leave a Response