
2019 நாடாளுமன்றத் தேர்தல் – நேற்று (ஏப்ர்ல் 11,2019) முதல் கட்டமாக உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், ஆந்திரா (25), அருணாசலபிரதேசம் (2), அசாம் (5), பீகார் (4), சத்தீஷ்கார் (1), காஷ்மீர் (2), மராட்டியம் (7), மணிப்பூர் (1), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1), ஒடிசா (4), சிக்கிம் (1), தெலுங்கானா (17), திரிபுரா (1), உத்தரபிரதேசம் (8), உத்தரகாண்ட்(5), மேற்கு வங்காளம் (2), லட்சத்தீவுகள் (1), அந்தமான் நிகோபார் தீவுகள் (1) என 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் நடந்தது.
இந்த முதல் கட்டத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி (நாக்பூர்-மராட்டியம்), ஹன்ஸ்ராஜ் ஆஹிர் (சந்திராப்பூர்-மராட்டியம்), வி.கே.சிங் (காசியாபாத்-.உ.பி.), மகேஷ் சர்மா (கவுதம்புத்தநகர்- உ.பி), சத்யபால்சிங் (பாக்பத்-உ.பி.), கிரண் ரிஜூஜூ (அருணாசல பிரதேசம் மேற்கு) ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய வேட்பாளர்கள்.
காங்கிரசுக் கட்சியின் ஹரிஷ் ராவத் (நைனிடால்-உத்தரகாண்ட்), ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் ஒவைசி (ஐதராபாத்- தெலுங்கானா), தெலுங்கு தேசம் கட்சியின் அசோக் கஜபதி ராஜூ (விஜயநகரம்-ஆந்திரா) ஆகியோரும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
வாரிசுகள் என்ற வகையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கே.கவிதா (நிஜாமாபாத்-டி.ஆர்.எஸ்), அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண்கோகாய் மகன் கவுரவ் கோகாய் (கலியபார்-காங்கிரஸ்), மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் (பீகாரின் ஜாமுய்-லோக்ஜனசக்தி), முன்னாள் மத்திய அமைச்சர் கே.சி.கந்தூரி மகன் மணிஷ் கந்தூரி (உத்தரகாண்ட் கரிவால்- காங்கிரஸ்) உள்ளிட்டோரும் முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தனர்.
மொத்தம் 1,279 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 14 கோடியே 21 இலட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். இவர்களுக்காக 1 லட்சத்து 70 ஆயிரத்து 664 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மின்னணு ஓட்டு எந்திரங்களும், வாக்குப்பதிவை உறுதி செய்து ஒப்புகைச்சீட்டு வழங்கும் ‘வி.வி.பாட்’ எந்திரங்களும் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம், ஒடிசா என 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த 4 மாநில சட்டசபைத் தேர்தலில் ஆந்திரா முக்கிய பங்கு வகிக்கிறது. அருணாசலபிரதேசம், சிக்கிம் சிறிய மாநிலங்கள்தான். ஒடிசாவை பொறுத்தமட்டில், 4 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நேற்று அங்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது.
ஆந்திராவில் ஆளும் தெலுங்குதேசம், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இடையேதான் பலப்பரீட்சை.
தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு (குப்பம்), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி (புலிவந்துலா), ஜனசேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண் (பீமாவரம், குஜூவாகா) ஆகியோர் நேற்றைய தேர்தலைச் சந்தித்த முக்கிய தலைவர்கள்.
பொதுவாக 20 மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் புதிதாக வாக்குரிமை பெற்றுள்ள இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்ததைக் காண முடிந்தது.
ஆந்திராவில் பல இடங்களில் மின்னணு ஓட்டு எந்திரங்களில் பழுதாகி பிரச்சினைகள் ஏற்பட்டன.
அந்த எந்திரங்களை சரிசெய்து மீண்டும் வாக்குப்பதிவு நடத்துகிற வரையில் வாக்காளர்கள் பெரும்பாலும் பொறுமையாகக் காத்திருந்தனர். சில இடங்களில் வாக்காளர்கள் கொந்தளித்தனர். அதிருப்தி அடைந்த பலர் திரும்பிச் சென்று விட்டனர்.
குண்டக்கல்லில் தங்கள் கட்சி சின்னம் சரியாக அச்சிடப்படவில்லை என்று கூறி பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, மின்னணு வாக்கு எந்திரத்தை தூக்கிப்போட்டு உடைத்தார். வாக்குப் பதிவு அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதன் காரணமாக அவர் உடனே கைது செய்யப்பட்டார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, குடும்பத்தினருடன் வந்து அமராவதி பகுதியில் உண்டவள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷ் போட்டியிடும் மங்களகிரி தொகுதியில் இது அடங்கியதாகும்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி புலிவந்துலாவிலும், ஜனசேனா தலைவர் நடிகர் பவன்கல்யாண் விஜயவாடாவிலும் வாக்குப்பதிவு செய்தனர்.
இங்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவிவேதி ஓட்டுப் பதிவு செய்தபோது ஒப்புகைச்சீட்டு வழங்கும் ‘வி.வி.பாட்’ எந்திரம் பழுதாகி, வேலை செய்யவில்லை.
அனந்தப்பூரில் நடந்த மோதலில் தெலுங்குதேசம் கட்சி தொண்டர் சித்தபாஸ்கர் ரெட்டி என்பவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர் புல்லாரெட்டி என்பவரும் உயிரிழந்தனர். அதன்பின்னர் அங்கு கூடுதல் காவல்துறை குவிக்கப்பட்டு அங்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.
இதே போல் சித்தூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த மாநிலத்தில் 362 மின்னணு வாக்கு எந்திரங்கள் செயல்படவில்லை என புகார்கள் எழுந்தன.
ஆந்திராவில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பழுது பிரச்சினையால் 150 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதினார்.
இந்த மாநிலத்தில் 20 இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டசபை சபாநாயகர் கோடல சிவபிரசாத ராவ் தாக்கப்பட்டார். 6 முறை தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும், இப்படி ஒரு தேர்தலை நான் சந்தித்தது இல்லை என்று அவர் வேதனையுடன் கூறினார்.
மராட்டிய மாநிலத்திலும் மின்னணு ஓட்டு எந்திரங்கள் சரியில்லை, பழுதுபட்டவை என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு 39 புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தெலுங்கானாவில் நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு மந்தமாக காணப்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் ஓட்டுப்பதிவு 4 மணிக்கு முடிந்தது. பிற இடங்களில் 5 மணிக்கு முடிந்தது. 185 வேட்பாளர்கள் போட்டியிடும் நிஜாமாபாத் தொகுதியில் 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 8 தொகுதிகளிலுமே வாக்காளர்கள் திரண்டு வந்து, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர். பெரும்பாலும் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் இல்லை.
காஷ்மீரில் ஜம்மு தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து வாக்களித்தனர். பாரமுல்லாவில் ஓட்டுப்பதிவு மிதமாக இருந்தது.
மேற்கு வங்காள மாநிலம் கூச்பெஹார், அலிபூர்துவார் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர்கள் பெருந்திரளாக வந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஓட்டுப்பதிவு செய்தனர். 2 தொகுதிகளிலும் தலா 81 சதவீத வாக்குகள் பதிவானது.
மிசோரமில் உள்ள ஒரே தொகுதியில் மாலை 5 மணி வரை 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதன்பின்னரும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
பீகாரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளிலும் மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அங்கு 53 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரே தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு புகார் எழுந்தது. இருப்பினும் 66 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல் கட்டத் தேர்தல் நேற்று முடிந்த நிலையில், தமிழகம், புதுவை, கர்நாடகம், மராட்டியம், உத்தரபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 13 மாநிலங் களில் 97 நாடாளுமன்ற தொகுதிகளில் 2 ஆவது கட்டத் தேர்தல் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்தத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பரப்புரை முழுவீச்சில் நடந்து வருகிறது.
