ராமதாஸ் திருமாவளவன் குறித்து சீமான் வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,கட்சித் தொண்டர்களுக்காக மார்ச் 17 இரவு வெளியிட்டுள்ள அறிவிப்பு….

சமூக வலைதளங்களில் பங்கேற்று இனமானப் பணியைச் செய்து கொண்டிருக்கிற என் தாய்த்தமிழ் உறவுகளுக்கு..

வணக்கம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை நடந்திராத மாபெரும் புரட்சியை நாம் தமிழர் கட்சி நிகழ்த்த இருக்கிறது.

மொத்தமுள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஆண்களுக்கும் 20 தொகுதிகளில் பெண்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு பாலின சமத்துவ புரட்சியை நாம் தமிழர் கட்சி நிகழ்த்தியுள்ளது.

கூட்டணி அரசியல் பேரங்களில் சிக்கிக்கொள்ளாமல் தமிழின நலன் சார்ந்த தனித்துவமான தமிழ்த் தேசிய அரசியல் தத்துவத்தை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது.

படித்த பண்பான மருத்துவர்கள் பேராசிரியர்கள் வழக்கறிஞர்கள் ஆசிரியர்கள் என இந்த மண்ணை உளமார நேசிக்கிற மாண்புமிக்க தமிழர்களை நமது வேட்பாளர்களாக நாம் தேர்தல் களத்திலே நிறுத்த இருக்கிறோம்.

மாபெரும் ஊடகங்களின் ஆதரவு நமக்கு இல்லாத நிலையில் சமூக வலைதளங்களே நமக்கான மாபெரும் பரப்புரை சக்தியாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பங்கேற்று செயல்பட்டு வருகின்ற நாம் தமிழர் கட்சி உறவுகள் பிற கட்சிகளை விமர்சிப்பதை தவிர்த்துக் கொண்டு நமது கட்சியின் அரசியல் தத்துவத்தினையும், நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயல்பாட்டு வரைவின் கருத்துக்களையும் முன்னிலைப்படுத்தி கருத்துக்கள் இட வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழின அரசியல் தலைவர்களான ஐயா மருத்துவர் ராமதாஸ், அண்ணன் திருமாவளவன், திரு வேல்முருகன் ஆகியோர் எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய எதிர்மறை கருத்துகள் மற்றும் விமர்சனங்களை நமது உறவுகள் அறவே தவிர்த்திட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட உள்ள நமது கட்சியின் தேர்தல் சின்னத்தையும் நமது வேட்பாளர்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கிற மகத்தான பணியில் தங்களது கவனத்தை முழுமையாக செலுத்திட வேண்டும் எனவும் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response