கோவா பாஜக முதல்வர் மரணம் – தேசிய துக்க தினமாக அறிவிப்பு

பாஜகவைச் சேர்ந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (வயது 63), நீண்ட காலமாக கணைய புற்றுநோயால் அவதியுற்று வந்தார். இதற்காக அவர் முதலில் கோவாவில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் அமெரிக்காவில் உயர் சிகிச்சை பெற்றார். அதைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கடைசியாக அவர் கோவாவில் உள்ள தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக முதல்வர் அலுவலகம் நேற்று (மார்ச் 17) மதியம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்து குவிந்தனர்.

சிறிது நேரத்திலேயே அவர் மரணம் அடைந்தார்.

அவர் கோவா முதலமைச்சராக 2000-2005, 2012-1014 காலகட்டங்களில் பதவி வகித்தார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 2014-2017 கால கட்டத்தில் இராணுவ அமைச்சராகப் பதவி வகித்தார்.

பின்னர் கோவா முதல்வராக 3 ஆவது முறையாகப் பதவி ஏற்றார்.

கோவா சட்டசபையில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மூக்கில் குழாய்கள் சொருகிய நிலையில் மனோகர் பாரிக்கர் பட்ஜெட் தாக்கல் செய்து பேசினார்.

அப்போது அவர், “நான் மகிழ்ச்சியுடனும், முழு உணர்வுகளுடனும் உள்ளேன். என் கடைசி மூச்சு உள்ளவரை கோவா மாநிலத்துக்காக உழைப்பேன்” என கூறினார்.

இவரது மனைவி மேதா ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு மரணம் அடைந்து விட்டார். இந்த தம்பதியருக்கு உத்பால், அபிஜித் என்று 2 மகன்கள் உள்ளனர்.

மனோகர் பாரிக்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி இன்று (திங்கட்கிழமை) தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்பட்டு உள்ளது.

Leave a Response