நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் உள்ள கட்சியினருக்கு சீமான் வேண்டுகோள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்திகள் சின்னத்தை ஒதுக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம்.

பல ஆண்டுகள் அனுபவம்வாய்ந்த தேசிய, திராவிடக் கட்சிகளை எதிர்த்து, முதல்முறையாக தேர்தலை எதிர்கொண்டது. புதிய சின்னத்தையும் கட்சிக் கொள்கைகளையும் தேர்தல் வரைவு திட்டங்களையும் தமிழகம் முழுவதும் கொண்டுசேர்க்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டார்.

அந்தத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 1.1% வாக்குகளைப் பெற்று மாற்றத்திற்கான விதையினை தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி ஊன்றியது.

வீழ்வதல்ல தோல்வி; வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி என்ற முழக்கத்தை ஏற்று முன்பை விட வேகமாக அரசியல் களத்திலும் மண்ணுக்கும் மக்களுக்குமான உரிமைப் போராட்டங்களிலும் பேரெழுச்சியாகத் திரளத் தொடங்கியது நாம் தமிழர் இளைஞர் படை.

வாக்குக்கு அதிகப்படியான பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறி தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்ற தேர்தல்களிலும் திருபரங்குன்றம் இடைத்தேர்தலிலும் துணிந்து களத்தில் நின்று மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றது.

தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து நடைபெற்ற இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிட்டு 3860 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 18 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கொள்கையில் எவ்வித தொய்வின்றி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு சரிபாதி தொகுதிகளை ஒதுக்கீடு செய்து மாபெரும் புரட்சிக்கான தொடக்கத்தை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கிவைத்துள்ளார்.

இந்தத் தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கம்போல் மெழுகுவர்த்திகள் சின்னம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முறையாக கோரப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக முன்னணி (People’s Democratic Front) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டதையடுத்து அக்கட்சிக்கு மெழுகுவர்த்திகள் (Candles) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள காரணத்தினால் அதே சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இராவணன், மாநில செய்திப்பிரிவுச் செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் பிரபு ஆகியோர் கொண்ட குழு டெல்லிக்கு நேரில் சென்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தொகுதிகளுக்கும் பொதுவான ஒரு சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கக்கோரியுள்ளது.

நாளை (13-03-2019) நாம் தமிழர் கட்சிக்குப் புதிய சின்னம் ஒதுக்க வாய்ப்புள்ளதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் டெல்லி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

எனவே, மெழுகுவர்த்திகள் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்பது உறுதியானதால் தேர்தல் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்திகள் சின்னத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமெனவும். புதிய சின்னம் கிடைக்கப்பெறும்வரை நமது கட்சியின் கொள்கைகளையும், ஆட்சியின் செயற்பாட்டு வரைவு திட்டங்களையும் எடுத்துரைத்து பரப்புரையில் ஈடுபடுமாறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response