விஷாலுக்குக் கண்டனம் தெரிவிப்பாரா கமல்? – சூடாகக் கேட்கும் சுரேஷ்காமாட்சி

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீதும் அதன் தலைவர் நடிகர் விஷால் மீதும் ஏராளமான புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. சங்கத்தின் முன்னாள் பொருளாளரான ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் விஷால் நிர்வாகம் மீது புகார் அளித்திருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இது குறித்து அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆர்.ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டது. மேலும் மாவட்ட பதிவாளர், பதிவுத் துறைத் தலைவர் ஆகியோரிடமும் இது குறித்து அறிக்கை கேட்கப்பட்டது.

அந்த அறிக்கையின் மூலம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாக தமிழக அரசுக்குத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இப்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையின் முதன்மை செயலாளரான கா.பாலசந்திரன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

அதில்..

2017 ஆம் ஆண்டில் இருந்து இந்தச் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கூட்டப்படவில்லை. ஆவணங்களில் பதிவாளரின் ஒப்புதலைப் பெறாமல் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 16(3), 26 ஆகிய பிரிவுகளை மீறியுள்ளார்கள்.

சங்கத்தின் அனைத்துப் புத்தகங்கள், மற்றும் ஆவணங்கள் ஆகியவை சென்னை தியாகராய நகர் அலுவலகத்தில்தான் பராமரிக்கப்படுகின்றன. பதிவு செய்யப்பட்டுள்ள அந்த அலுவலகத்தின் சூழ்நிலை மாற்றம் பற்றிய தகவல்களை சங்கம் பதிவு செய்யவில்லை.

சங்கத்தின் குறிப்புகள் மற்றும் கோப்புகளுக்கு செயற்குழுவின் ஒப்புதலைப் பெறவில்லை. தியாகராயநகரில் தனி அலுவலகம் எடுக்கப்பட்டு, அதற்கு முன் பணம் என்ற பெயரில் 16 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் இருந்து வாடகையாக மாதம் 2 இலட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

புகார்தாரர் கூறியதுபோல இது ஒருமித்த முடிவு கிடையாது. தேவையான ஆவணங்களைப் பதிவு அலுவலகத்தில் வைத்துக் கொள்ளவில்லை. முகவரி மாற்றத்துக்கான விண்ணப்பத்தை இதுவரை பதிவாளரிடம் அளிக்காமல் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 29(3), 13 ஆகிய பிரிவுகளை மீறியுள்ளர்கள்.

சங்க உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம், பரிசுத் தொகை, மகன், மகள் திருமண உதவித் தொகை, குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை, தீபாவளி பரிசுத்தொகை என்ற வகைகளில் சங்க நிதியைப் பகிர்ந்துள்ளார்கள். அது, சங்கத்தின் துணை விதிகளுக்கும் சட்டங்களுக்கும் முரணாகக் காணப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 25 ஆம் பிரிவு மீறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்படி உங்களுக்கு விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. எனவே, சிறப்பு அதிகாரி ஒருவரை அரசே நியமித்து உங்கள் சங்கத்தின் மேலாண்மை விவகாரங்களை ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு இன்னும் 30 நாட்களுக்குள் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், உங்களது சங்கத்தை நிர்வகிக்க அரசுத் தரப்பில் இருந்து சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு சங்கத்தின் மேலாண்மை அதிகாரம் தமிழக அரசால் எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கூறியிருப்பதாவது…..

இளைஞர்கள்கிட்ட கொடுத்தா அப்படியே தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்க கட்டிடம் மாதிரி எழும்பி நிற்கும்னு சொல்லி ஓட்டுப் போடச் சொன்னாங்க.

நம்ம ஆட்கள் நம்பி ஓட்டையும் போட்டாங்க.

வந்ததிலிருந்து குரங்கு பூமாலையை பிச்சிப்போட்ட கதையா ஒண்ணும் மிச்சமில்லாம கருப்புடிங்கிட்டாங்க.

சங்கம் மட்டும் பேர்ப்பலகையோட மிச்சமிருக்கு.

நான் மேடைக்கு மேடை அடிச்சிக்கிட்டேன். விஷால் வேணாம்.. வேணாம்னு… யார் காதும் திறக்கலை.

நம்மளை காண்ட்ராவர்ஸி ஆளுன்னு உலகத்தை நம்ப வச்சதோட நிற்காம, சங்கத்தை பூட்டுப் போட்ட விவகாரத்துக்காக 28 தயாரிப்பாளர்களில் நானும் ஒருத்தனாக சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

அதிகாரம் ஆணவம் தான்தோன்றித்தனம் கொள்ளையடிக்கும் நோக்கம் இது எல்லாவற்றையும் எப்போதும் என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்க முடியாது.

தொண்டை கிழியக் கத்தியும் செவிடான பல தயாரிப்பாளர்களின் காதுகளுக்கு இப்போது தமிழ்நாடு அரசே கணக்கு வழக்குப் பார்த்து நேர்மையற்ற சங்க நிர்வாகம் என்பதாக சங்கூதியிருக்கிறது.

இப்போவாவது இவர்களின் கண் திறக்கட்டும்.

ஓட்டுப்போட்டவர்களுக்கு காசு கொடுக்க சொந்தக் காசை எடுக்காமல் சங்கக் காசை எடுத்துக் கொடுத்தார்கள்.

கேள்வி கேட்டவர்களை எதிரியாக்கி பகைமை வளர்த்தார்கள்.

யாருக்கு என்ன பிரச்சனை எனக் கேட்க நிர்வாகிகள் யாருமில்லை. போனை எடுக்கக்கூட ஆள் கிடையாது.

இப்படிப்பட்ட மோசமான நிர்வாகம் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கிடையாது.

அப்படியொரு மோசமான நிர்வாகம் என ஆராய்ந்த அரசே காரித்துப்பியிருக்கிறது.

இளைஞர்கள் கிட்ட கொடுங்கன்னு வக்காலத்து வாங்கிய உலக நாயகனை இப்போ என்ன கேள்வி கேட்கலாம்.

தவறை தட்டிக் கேட்பாரா அல்லது அவர் சொன்ன மாதிரி நல்லவங்க தோள்ல ஒரு கையும், கெட்டவங்க மேலகை இன்னொரு கையும் போட்டுக்குவேன்ற மாதிரி சொல்லப்போறாரான்னு தெரியலை…

கமல் இப்படிப்பட்டவர்களை ஆதரிக்க முழுக்க முழுக்க காரணம் தயாரிப்பாளர் தாணு மீது அவருக்கிருக்கும் பழிவாங்கும் படலத்தின் ஒரு பகுதிதான்.

அவரைப் போலவே இவர்களும் எதிரியாகவும் பொறுப்பற்றும் நடந்து கொண்டதை ஒருபோதும் கண்டிக்காதவராகத்தான் கமல் மவுன சாமியாகி இருந்தார்.

இப்போதாவது கண்டிப்பாரா? அல்லது தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆள் சேர்ப்பாரான்னு தெரியலை…

கணக்கு கேட்டார்கள்… தேவையில்லாமல் செயல்பட்ட அலுவலகத்தை பூட்டினார்கள் என ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பிய இந்நிர்வாகத்தின் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சங்க அலுவலகத்தை மூடினார்கள் என விசாலுக்கு ஆதரவாக அனுதாபத்தை உருவாக்கப் போராடிய ஒத்தூதும் குழுவுக்கும் சேர்த்தே குத்துவிட்டிருக்கிறது அரசு. அப்படியொரு அலுவலகமே விதி முறையற்ற செயல் என!

இவ்வளவு தூரம் வந்த பிறகாவது கமல் தனது ஆதரவை விலக்கிக் கொள்வாரா?? அல்லது வழக்கமாகப் போடும் தனது ஏழு மணி ட்வீட்டில் கண்டனத்தை பதிவு செய்தாலே போதும்?
செய்வாரா?

எதிர்பார்ப்பில் தயாரிப்பாளர்

சுரேஷ் காமாட்சி

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response