திமுக கூட்டணில் மேலும் ஒரு கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு

2019 நாடாளுமன்றத் தேர்தல்- திமுக கூட்டணியில் காங்கிரசுக் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்தன.

இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் இதற்கான ஒப்பந்ததத்தில் பிப்ரவரி 26 அன்று காலை கையெழுத்திட்டனர்.

அப்போது, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, மாவட்டச் செயலாளர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஆர்.தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்த ஒப்பந்தம் முடிந்து வெளியில் வந்த கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவது என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

தி.மு.க.-கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இடையிலான உடன்பாடு 2 கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்று ஒப்பந்தமாகி உள்ளது. தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் பணியாற்றுவோம். கூட்டணியின் மகத்தான வெற்றிக்குப் பாடுபடுவோம். 21 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response