53 பந்துகளில் 100 ரன்கள் – விராட்கோலி தோனி ஆட்டம் வீண்

இந்தியா – ஆஸ்திரேலியா மட்டைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான 2 ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பிப்ரவரி 27 அன்று நடந்தது.

இந்திய அணியில் மூன்று மாற்றமாக உமேஷ் யாதவ், ரோகித் சர்மா, மயங்க் மார்கண்டே ஆகியோர் நீக்கப்பட்டு ஷிகர் தவான், விஜய் சங்கர், சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணித்தலைவர் பிஞ்ச் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். முதல் 2 ஓவர்களை எச்சரிக்கையாக ஆடிய இவர்கள் அதன் பிறகு வேகத்தை கூட்டினர். ரசிகர்களுக்கு விருந்து படைத்த உள்ளூர் வீரரான லோகேஷ் ராகுல், ஜெயே ரிச்சர்ட்சன், கம்மின்சின் ஓவர்களில் தலா 2 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்திருந்தது.

அணியின் ஸ்கோர் 61 ரன்களாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. நாதன் கவுல்டர்-நிலே வீசிய ஷாட்பிட்ச் பந்தை லோகேஷ் ராகுல் (47 ரன், 26 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) தட்டிவிட்ட போது ‘தேர்டுமேன்’ பகுதியில் கேட்ச்சாக மாறியது. அடுத்து ரிஷாப் பான்ட் வந்தார். மறுமுனையில் தடுமாற்றத்துடன் ஆடி வந்த ஷிகர் தவான் (14 ரன், 24 பந்து, ஒரு பவுண்டரி) சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார். அதாவது அவர் தூக்கியடித்த பந்தை ஸ்டோனிஸ் பாய்ந்து விழுந்து பிடித்தார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்தை அவர் தரையோடு அள்ளுவது போன்றே தெரிந்தது. பல்வேறு கோணங்களில் ரீப்ளேயை ஆராய்ந்து குழப்பத்திற்கு உள்ளான 3-வது நடுவர் நிதின் மெனோன் கடைசியில் அவுட் என்று அறிவித்தார். இதனால் தவான் அதிருப்தியோடு வெளியேறினார். அடுத்த ஓவரில் ரிஷாப் பான்டும் (1 ரன்) கேட்ச் ஆக, இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ரன்ரேட்டும் சற்று தளர்ந்தது.

இந்தச் சூழலில் கைகோர்த்த அணித்தலைவர் விராட் கோலியும், டோனியும் நிலைத்து நின்று ஆடி அணிக்கு வலுச் சேர்த்தனர். இதனால் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. வேகப்பந்து வீச்சாளர் கவுல்டர்-நிலேயின் ஒரே ஓவரில் கோலி ‘ஹாட்ரிக்’ சிக்சர்களை தூக்கியடித்து குதூகலப்படுத்தினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இது கோலியின் சொந்த ஊர் மைதானம் என்பதால், சிரமமின்றி ஷாட்டுகளை அடித்தார். டோனியும் தனது பங்குக்கு ரசிகர்களை குஷிப்படுத்த தவறவில்லை. டார்சி ஷார்ட்டின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார்.

இவர்களின் துரிதமான பேட்டிங் இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவியது. கடைசி ஓவரில் டோனி 40 ரன்களில் (23 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். டோனி- கோலி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் (53 பந்து) திரட்டியது. டோனிக்கு பிறகு வந்த தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரி ஓடவிட்டார். அதைத் தொடர்ந்து கடைசி பந்தை கோலி சிக்சருடன் முடித்து வைத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. தனது 20-வது அரைசதத்தை கடந்த கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும் (38 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 8 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

பின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் (7 ரன்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (8 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறிய போதிலும், டார்சி ஷார்ட்டும், கிளைன் மேக்ஸ்வெல்லும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். ஷார்ட் 40 ரன்களில் கேட்ச் ஆனார்.

பின்னர் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் இறங்கினார். இன்னொரு புறம் மேக்ஸ்வெல், இந்திய பந்து வீச்சை நொறுக்கியெடுத்தார். அவரது அதிரடி ஜாலத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய கேப்டன் கோலி எடுத்த முயற்சிக்கு பலன் இல்லை. கிடைத்த ஒரு சில ரன்-அவுட் வாய்ப்புகளையும் நழுவ விட்டனர். அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார்.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் வீசினார். அவர் முதல் 2 பந்தில் 2 ரன் விட்டுக்கொடுத்தார். அதன் பிறகு 3-வது பந்தை சிக்சருக்கும், 4-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி மேக்ஸ்வெல் தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 113 ரன்களுடனும் (55 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்), ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மேக்ஸ்வெல் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி கண்டிருந்தது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி மார்ச் 2 ஆம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.

Leave a Response